search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3-வது முறையாக மறுபிறவி எடுத்துள்ளேன்: குமாரசாமி பேட்டி
    X

    3-வது முறையாக மறுபிறவி எடுத்துள்ளேன்: குமாரசாமி பேட்டி

    • எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நான் இந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
    • பக்கவாத பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டால் ஒரு நிமிடத்தை கூட விரையம் செய்யக்கூடாது.

    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி கடந்த 29-ந் தேதி பிடதி அருகே உள்ள தனது தோட்ட இல்லத்தில் தங்கி இருந்தார். அன்றைய தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை குடும்பத்தினர் அழைத்து வந்து ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

    பின்னர் உடனடியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் தொடங்கினர். 2 நாட்களில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றினர். அங்கு 3 நாட்கள் இருந்த நிலையில் குமாரசாமி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    அவர் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு அந்த மருத்துவமனையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நான் இந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இங்கு டாக்டர்கள் எனக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்ததால் நான் குணம் அடைந்துள்ளேன். கடந்த 5 நாட்களாக எனது நண்பர்கள் பயத்தில் இருந்தனர். நான் இன்று (நேற்று) உங்களிடம் பேசுகிறேன் என்றால் நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்.

    கடவுள் எனக்கு 3-வது முறையாக மறுபிறவி வழங்கியுள்ளார். ஒருவர் ஒரு முறை தான் பிறவி எடுக்க முடியும். ஆனால் எனது 64 ஆண்டு வாழ்க்கையில் 3-வது முறையாக பிறவி எடுத்துள்ளேன்.

    கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு நான் படுக்கையில் இருந்து எழுந்தேன். எனது உடல்நிலை நன்றாக இல்லை என்பதை உணர்ந்தேன். நான் உடனடியாக டாக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நிலையை கூறினேன். அதன் பிறகு நரம்பியல் டாக்டருடன் பேசினேன். அவர் கூறிய அறிவுரைப்படி நான் மருத்துவமனையில் சேர்ந்தேன்.

    பக்கவாத பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டால் ஒரு நிமிடத்தை கூட விரையம் செய்யக்கூடாது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும். நான் எனக்கு ஏற்பட்ட பக்கவாத பாதிப்பை அலட்சியப்படுத்தி இருந்தால், மறுநாள் காலையில் தான் ஆஸ்பத்திரிக்கு போய் இருப்பேன். அவ்வாறான நிலை ஏற்பட்டு இருந்தால், மீதமுள்ள எனது வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாக இருந்திருப்பேன்.

    டாக்டர்கள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். நோயாளிகள் வந்தால் அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக பணியாற்றுகிறார்கள்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    Next Story
    ×