என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் பாஜகவின் NDA கூட்டணி இமாலய வெற்றி பெற்றதற்கு  முக்கிய காரணங்கள் இவைதான்!
    X

    பீகாரில் பாஜகவின் NDA கூட்டணி இமாலய வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணங்கள் இவைதான்!

    • தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளது.
    • முஸ்லிம்கள் - யாதவ் என்ற சமூக ரீதியான பார்முலா தோற்றது.

    243 தொகுதிகளுக்கு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளது.

    அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் பெண்களும் இளம் வாக்காளர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்ததாக நம்பப்படுகிறது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த வெற்றிக்கு 5 காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

    முதலாவது சரியான சீட் பகிர்வு ஆகும். என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜக, ஜேடியு, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) உள்ளிட்ட கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே அதிருப்தி இன்றி இணக்கமான முறையில் இடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

    ஆனால் எதிர்தரப்பில் காங்கிரஸ்-ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணியில் சீட் பகிர்வில் அதிருப்தி காரணமாக வெளிப்படையாக மோதிக்கொண்டது.

    ஹேமந்த் சோரனின் முக்தி மோர்சா, ஒவைசி ஆகியோர் தனித்துப் போட்டியிட்டனர். ஒவைசி 5 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளார். தேசிய கட்சியான காங்கிரஸ் அவரை விட 1 சீட் அதிகமாக 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்ததாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது பிரச்சாரத்தின் போது 'காட்டு ராஜ்ஜியம்' மீண்டும் வரும் என்ற அச்சத்தை பீகார் மக்களிடையே உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது.

    மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பேசிய அனைத்து மேடைகளில் லாலு பிரசாத்-இன் காட்டு ராஜ்ஜியம் குறித்து மக்களுக்கு பயமூட்டிய வண்ணம் இருந்தனர். முடிந்தது.

    மூன்றாவதாக, அனைத்து சாதிகளையும் திருப்திப்படுத்தும் வியூகம் என்டிஏவுக்கு கை கொடுத்தது. காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி முஸ்லிம்கள் - யாதவ் என்ற சமூக ரீதியான பார்முலாவின் மூலம் பயனடைந்து வந்த நிலையில் பாஜக பெண்கள் - இளைஞர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்புகளின் ஒருங்கிணைப்பை உள்ளடக்கிய பார்முலாவை முன்னெடுத்தது.

    குறிப்பாக சுமார் ஒன்றரை கோடி பெண்களுக்கு வங்கிக்கணக்கில் தொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை என்ற பெயரில் நேரடியாக ரூ.10,000 டெபாசிட் செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில், பெண்களின் வாக்குப்பதிவு ஆண்களை விட 10-20 சதவீதம் அதிகமாக இருந்தது.

    மேலும் இளைஞர்களை குறிவைத்து சமூக நல திட்டங்களையும் ஆளும் நிதிஷ் குமார் தேர்தலுக்கு முன் முழுவீச்சில் முன்னெடுத்தார்.

    அதேநேரம் முதல் முறை வாக்காளர்கள் 14 லட்சம் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்ட நிலையில் அந்த வாக்கு வங்கி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிகம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. புதிய வாக்காளர்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    Next Story
    ×