என் மலர்
இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன்- சந்திரபாபு நாயுடு
- தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி.
- தெலுங்கு தேசம் வெற்றியானது ஆந்திர மாநில வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வெற்றி.
ஆந்திர முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு இன்று விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 5 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தனர்.
தெலுங்கு தேசத்திற்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான வெற்றி. என் வாழ்நாளில் இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நான் கண்டதில்லை.
வெளிநாடுகளில் இருந்து வந்தும் தெலுங்கு தேசம் கட்சிக்கு விருப்பப்பட்டு வாக்களித்து சென்றுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தெலுங்கு தேசம் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
மக்களுக்கு சேவையாற்ற அதிகாரத்திற்கு வரும் போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக இருக்கிறேன். பா.ஜனதா கூட்டணியில் உறுதியாக நீடிப்பேன். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்கிறேன். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளேன்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மக்கள் எங்களுக்கு வாக்களித்து உள்ளனர். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் மிக மோசமான துன்பங்களை சந்தித்தேன்.
தற்போது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு அங்கமாக நாங்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா கட்சிகள் இணைந்து பணியாற்றியதால் இந்த வெற்றி கிடைத்தது.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் என்னை எதற்காக கைது செய்தார்கள் என்பதற்கு சரியான விளக்கம் தரப்படவில்லை. நான் பல்வேறு அரசியல் மாற்றங்களை பார்த்திருக்கிறேன். நான் அனுபவமிக்கவன். தேசம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்ததால் தேர்தலில் வென்றோம்.
உள்துறை மந்திரி அமித்ஷா, கூட்டணி கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோருக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.






