search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேதார்நாத்-கவுரிகுண்ட் இடையே ரோப்கார் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
    X

    கேதார்நாத்-கவுரிகுண்ட் இடையே ரோப்கார் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

    • சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
    • சீன எல்லை அருகே உள்ள அந்த கிராமத்துக்கு பிரதமர் மோடி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளன. இந்த 4 திருத்தலங்களையும் தரிசனம் செய்யும் ஆன்மிக பயணத்தை சார்தாம் யாத்திரை என்று அழைக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் கடும் பனி பொழிவு இருக்கும் என்பதால் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான கோடை காலத்தில் மட்டுமே இந்த தலங்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். குளிர்காலத்தில் இந்த ஆலயங்கள் மூடப்பட்டே இருக்கும்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கேதார்நாத், பத்ரிநாத் ஆலயங்களில் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி இந்த ஆண்டு தரிசனத்துக்காக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) 2 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றார்.

    டேராடூன் விமான நிலையத்தில் அவரை உத்தரகாண்ட் கவர்னர் குர்மீத் சிங், முதல்-மந்திரி புஸ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி அஜய் பட் ஆகியோர் வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    காலை 8.30 மணிக்கு அவரது ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் தரை இறங்கியது. அங்கிருந்து அவர் கேதார்நாத் ஆலயத்துக்கு சென்றார். பிரதமர் மோடி வருகையையொட்டி கேதார்நாத் சிவாலயம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    அங்கு அவர் சிறப்பு பூஜைகள் செய்தார். கேதார்நாத்தில் ஆதிசங்கரர் முக்தி அடைந்ததாக கூறப்படும் இடத்திலும் அவர் வழிபாடுகள் செய்தார். சிறிது நேரம் அங்கு அமர்ந்து தியானமும் செய்தார்.

    இதையடுத்து கேதார்நாத்-கவுரிகுண்ட் இடையே 7.9 கி.மீ. தொலைவில் அமைய இருக்கும் ரோப்கார் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கேதார்நாத்தில் சுமார் 3 மணி நேரம் அவர் இருந்தார். அதன் பிறகு அவர் பத்ரிநாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    அங்கு நடைபெறும் ஆலயத் திருப்பணிகள் பற்றி ஆய்வு செய்தார். இன்று பிற்பகல் பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் சீன எல்லையில் அமைந்துள்ள மனா கிராமத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மனா கிராமத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் மோடி பேச உள்ளார். சீன எல்லை அருகே உள்ள அந்த கிராமத்துக்கு பிரதமர் மோடி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    Next Story
    ×