என் மலர்
இந்தியா

டெல்லியில் பிப்ரவரி 8-ந்தேதி பினராயி விஜயன் தலைமையில் போராட்டம்
- பல்வேறு திட்டங்களில் தென் மாநிலங்களை மோடி தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.
- பிற மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியின் கூட்டம் நடந்தது. அதில், கேரள மாநிலத்தை புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி ஜந்தர்மந்தரில் பிப்ரவரி 8-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்குகிறார். அதில் கேரள மாநில மந்திரிகள், இடதுசாரி கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில அரசுகளுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகளை கைவிடுமாறு கேரள அரசு சார்பில் மத்திய அரசிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் தென் மாநிலங்களை மோடி தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.
அதனை கண்டித்து பிப்ரவரி 8-ந்தேதி டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்த இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அன்றைய தினம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிற மாநில முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






