என் மலர்
இந்தியா

ஆற்றை கடக்க முயன்றபோது பரிதாபம்: முதலை தாக்கியதில் நீரில் மூழ்கி 3 பேர் பலி- 5 பேர் மாயம்
- மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் இறங்கி நடந்து சென்று உள்ளனர்.
- ஆற்றின் குறுக்கே பாலம் எதுவும் இல்லாத சூழலில், வேறு வழியின்றி கோவிலுக்கு ஆற்றில் இறங்கி சென்று உள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சிலாவாத் கிராமத்தில் வசித்து வரும் குஷ்வாஹா சமூகத்தினர் சிலர் ஆண்கள், பெண்கள் என கைலா தேவி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர்.
அவர்கள் மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் இறங்கி நடந்து சென்று உள்ளனர். அவர்கள் ஆதரவாக ஒருவருக்கு ஒருவர் கையை பிடித்தபடி தண்ணீரில் நடந்து உள்ளனர். இந்த ஆற்றில் முதலைகள் அதிகம் உள்ளன என கூறப்படுகிறது.
அப்போது திடீரென ஒரு முதலை அவர்களை தாக்கி உள்ளது. இதனால் பயந்து போன அவர்கள் நீரில் மூழ்கி உள்ளனர். ஆற்றில் நீரோட்டமும் அதிகளவில் இருந்து உள்ளது. இதில், 8 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மற்ற 9 பேர் நீந்தி கரை சேர்ந்து விட்டனர்.
ஆற்றின் குறுக்கே பாலம் எதுவும் இல்லாத சூழலில், வேறு வழியின்றி கோவிலுக்கு ஆற்றில் இறங்கி சென்று உள்ளனர். போலீசார் இதுவரை தேவகிநந்தன் (வயது 50), என்ற ஆண், கல்லோ பாய் என்ற பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் என 3 பேரின் உடல்களை மீட்டு உள்ளனர். மீதமுள்ள 5 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.