search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தரிசன டிக்கெட் கிடைக்கும் என்று தகவல் வெளியிட்ட போலி இணையதளங்களை முடக்க நடவடிக்கை- திருப்பதி தேவஸ்தானம் தீவிரம்
    X

    தரிசன டிக்கெட் கிடைக்கும் என்று தகவல் வெளியிட்ட போலி இணையதளங்களை முடக்க நடவடிக்கை- திருப்பதி தேவஸ்தானம் தீவிரம்

    • ஆன்லைனில் வெளியிடப்படும் தரிசன டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது.
    • பக்தர்கள் யாரும் தரிசன டிக்கெட்டுகள் கேட்டு புரோக்கர்களை நாடி செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக பல்வேறு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் டைம் ஸ்லாட் முறையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ 300 டிக்கெட்டுகளும், ஸ்ரீவாணி அறக்கட்டளை ஆயிரம் டிக்கெட்டுகளும், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்காரம், சுப்ரபாதம் சேவை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.

    ஆன்லைனில் வெளியிடப்படும் தரிசன டிக்கெட் உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டு விடுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாததால் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய சிரமம் அடைகின்றனர். இதனால் குறுக்கு வழியில் தரிசன டிக்கெட்டுகளை பெற திருப்பதியில் உள்ள புரோக்கர்களை நாடி செல்கின்றனர்.

    அங்குள்ள புரோக்கர்கள் போலி இணைய தளத்தை உருவாக்கி தரிசன டிக்கெட்களை போலியாக தயார் செய்து பக்தர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிலையில் போலி இணையதளத்தை உருவாக்கிய நபர் ஒருவர் ஸ்ரீ வாணி அறக்கட்டளை மற்றும் பிரேக் தரிசன டிக்கெட் ரூ 10 ஆயிரத்து 500க்கு கிடைக்கும் என அவரது செல்போன் என்னுடன் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவு செய்தார். தேவஸ்தான அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிய வந்தது.இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் போலி இணையதளத்தை முடக்கினர். மேலும் வாட்ஸ் அப்பில் தரிசன டிக்கெட் கிடைக்கும் என பதிவு செய்த நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பக்தர்கள் யாரும் தரிசன டிக்கெட்டுகள் கேட்டு புரோக்கர்களை நாடி செல்ல வேண்டாம் என தேவஸ்தானம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது.

    இருப்பினும் சில பக்தர்கள் புரோக்கர்களை நாடி தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். போலி தரிசன டிக்கெட் விற்பனை செய்ததாக பல புரோக்கர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 77,522 பேர் தரிசனம் செய்தனர்.32,390 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×