என் மலர்
இந்தியா

ஜெயிலில் இருந்து விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால் அனுமன் கோவிலில் வழிபாடு
- கெஜ்ரிவால் இன்று மாலை 2 இடங்களில் ரோடு ஷோ நடத்தி ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
- மாவை 6 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியிலும் அவர் வாகன பேரணியில் ஈடுபட்டு ஓட்டு சேகரிக்கிறார்.
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது. அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திறந்த காரில் நின்று அவர்கள் மத்தியில் கெஜ்ரிவால் கூறும் போது, "சர்வாதிகாரத்துக்கு எதிராக முழு பலத்துடன் போராடுகிறேன். ஆனால் சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற 140 கோடி மக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார்.
ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் இன்று காலை கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் உடன் சென்றனர்.
அதை தொடர்ந்து பிற்பகலில் ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.
கெஜ்ரிவால் இன்று மாலை 2 இடங்களில் ரோடு ஷோ நடத்தி ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
மாலை 4 மணியளவில் தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலி பகுதியிலும், 6 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியிலும் அவர் வாகன பேரணியில் ஈடுபட்டு ஓட்டு சேகரிக்கிறார்.
தேர்தல் பிரசாரத்துக்கு மட்டுமே அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமின் வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






