search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அடுத்த மாதம் மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் வருகிறது- மத்திய அரசு கடும் எதிர்ப்பு
    X

    அடுத்த மாதம் மேலும் ஒரு சீன உளவுக் கப்பல் வருகிறது- மத்திய அரசு கடும் எதிர்ப்பு

    • கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில் நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும்.
    • கப்பல் கடல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டது.

    புதுடெல்லி:

    இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணி என்ற அடிப்படையில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தியாவும் இதற்கு அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன உளவு கப்பல்கள் இலங்கையின் அம்பன் தோட்டா, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. இந்த கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில் நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும். இந்த கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வ தற்காகவே வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே இலங்கை கடல் பகுதிக்கு அடிக்கடி வருவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.

    சீனாவின் உளவு கப்பலான 'ஷி யான்-6' கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பல் இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கப்பல் கடல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டது. ஆனால் அந்த கப்பலும் இந்தியாவை உளவு பார்க்க வந்ததாகவே இந்தியா சார்பில் இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி 'ஷி யான்-6' கப்பல் தனது ஆய்வுப்பணியை முடித்து விட்டு கடந்த 2-ந்தேதி சிங்கப்பூர் சென்றடைந்தது. இந்த கப்பல் ஆய்வு பணிக்காக இலங்கையை சென்றடையும் முன்பு சென்னையில் இருந்து 500 கடல் மைல் தொலைவில் காணப்பட்டது.

    ஷி யான்-6

    இந்த நிலையில் இந்திய கடல் பகுதிக்கு அடுத்த மாதம் மேலும் ஒரு சீன உளவுக்கப்பல் வருகிறது. இந்த கப்பல் 5 மாதம் தங்கி இருந்து ஆய்வு செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த உளவு கப்பலை இலங்கை மற்றும் மாலத்தீவு துறைமுகங்களில் நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக அந்த 2 நாடுகளிடமும் சீனா அனுமதி கேட்டுள்ளது.

    இந்த கப்பல் வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் இந்திய பெருங் கடலின் தெற்கு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதையறிந்த மத்திய அரசு, இலங்கை, மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுடனும் ஏற்கெனவே பேசி சீனாவின் உளவு திட்டத்தை எடுத்துக்கூறி சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆய்வு செய்வதை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே சீனாவின் உளவு கப்பலான 'ஷியாங் யாங் ஹாங் 03' தென் சீன கடல் பகுதியில் உள்ள ஷியாமென் கடற்கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது. 2 நாடுகளிடமும் அனுமதி பெற்ற பிறகு அந்த கப்பல் மலாக்கா வழியாக மாலத் தீவு மற்றும் இலங்கைக்கு பயணிக்கும்.

    இந்த உளவு கப்பல் 4813 டன் எடை கொண்டது. இந்த கப்பலில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வு கருவிகள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் இடம்பெற்று உள்ளன.

    இலங்கையை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாலும், மாலத்தீவு அரசு தற்போது சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாலும் உளவு கப்பலை அனுப்பி இந்தியாவை உளவு பார்க்க இந்த இரு நாடுகளையும் பயன்படுத்துகிறது. சீனாவின் தந்திரத்தை அறிந்ததால் இந்தியா சீன கப்பல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயுடன், பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் எடுத்துக் கூறியுள்ளார். ஆனாலும் கடந்த முறை சீன கப்பலுக்கு ரணில் விக்கிரமசிங்கே அனுமதி அளித்தார்.

    சீனா ஏற்கனவே கம்போடியா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துறைமுகங்களை எதிர்கால கடற்படை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கையகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த துறைமுகங்களில் முதலீடும் செய்துள்ளது. இந்திய பெருங்கடல் முழுவதிலும் சீனா தனது தடத்தை விரிவுபடுத்த முயல்வதால் அதை தடுக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

    Next Story
    ×