search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது- காங்கிரஸ் எம்.பி. காரசார குற்றச்சாட்டு
    X

    நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது- காங்கிரஸ் எம்.பி. காரசார குற்றச்சாட்டு

    • காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்கினார்.
    • பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் பேச வைக்க வேண்டும் என்ற இலக்குடன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

    அதை மத்திய அரசு ஏற்காததால் கடந்த 2 வாரமாக மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த முடியாமல் அமளி செய்து எதிர்க்கட்சிகள் முடக்கின.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் 'இந்தியா' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. பிரதமர் மோடியை பாராளுமன்றத் தில் பேச வைக்க வேண்டும் என்ற இலக்குடன் அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டார். அதன்மீது ஆகஸ்டு 8, 9-ந்தேதிகளில் விவாதம் நடைபெறும் என்றும், 10-ந்தேதி பதில் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    அதன்படி பாராளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் சார்பில் முதலில் ராகுல் காந்தி தனது வாதத்தை எடுத்து வைப்பார் என்று முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் அவருக்கு பதில் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் எழுந்து பேசினார்.

    உடனே மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி எழுந்து, "உங்கள் சார்பில் முதலில் ராகுல் ஏன் பேசவில்லை" என்றார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதையடுத்து பா.ஜ.க. எம்.பி.க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதன் பிறகு கௌரவ் கோகாய் தொடர்ந்து பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-

    மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி. அங்கு நடப்பது பற்றி இங்கு அவசியம் விவாதிக்க வேண்டும். அந்த மாநிலத்தில் கடுமையான வன்முறைகள் ஏற்பட்டு லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்ட பிறகும் பிரதமர் ஏன் அங்கு செல்லவில்லை?

    மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார். மணிப்பூர் விவகாரம் பற்றி இதுவரை அவர் 30 நிமிடங்கள் மட்டுமே பேசி உள்ளார். ஏன் அவர் பேச மறுத்து மவுன விரதம் கடைபிடிக்கிறார்?

    மணிப்பூரில் இவ்வளவு கலவரம் நடந்த பிறகும் அந்த மாநில முதல்வர் பதவி விலகாதது ஏன்? அவரை ஏன் மத்திய அரசு இவ்வளவு நாளும் காப்பாற்றுகிறது. மோடியின் மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தால்தான் தீர்வு ஏற்படும்.

    இதை கருத்தில் கொண்டுதான் நாங்கள் இந்த சபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறோம். எங்களுக்கு எவ்வளவு எம்.பி.க்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கை பற்றி முக்கியம் இல்லை. மணிப்பூர் விவகாரம்தான் முக்கியம்.

    மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது பற்றி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். நீங்கள் ஒரு தடவை மணிப்பூருக்கு நேரில் சென்று பார்த்து விட்டு வந்து இங்கு பேசுங்கள்.

    இன்று வரை மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. அந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

    பிரதமரின் இரட்டை என்ஜின் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது. மணிப்பூரில் அவரது அரசு தோல்வி அடைந்ததை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான் மணிப்பூரில் 150 பேர் இறந்தனர். சுமார் 5 ஆயிரம் வீடுகள் எரிக்கப்பட்டன. 60 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். சுமார் 6,500 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான சூழ்நிலை உருவாக்க வேண்டிய மாநில முதல்-மந்திரி கடந்த 2 ,3 தினங்களில் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளார்.

    மணிப்பூரில் இன்று வரை வன்முறை ஓய்ந்த பாடில்லை. அங்கு போதை மருந்து அச்சுறுத்தலும் அதிகரித்து வருகின்றன. மணிப்பூர் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது நீதிக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்.

    சீன எல்லை விவகாரத்திலும் பிரதமர் பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

    இவ்வாறு கௌரவ் கோகாய் பேசினார்.

    மதியம் 12.45 மணி அளவில் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகாய் தனது பேச்சின் போது பிரதமர் மோடியை மவுன பிரதமர் என்று விமர்சித்தார். இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி.க்களை நோக்கி கோஷமிட்டனர்.

    பதிலுக்கு காங்கிரஸ் எம்.பி.க்களும் எதிர்கோஷம் எழுப்பினார்கள். இதனால் பாராளுமன்றத்தில் கடுமையான அமளி நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா சுமார் 5 நிமிடம் சபையில் நிலவிய அமளியை பார்த்துக் கொண்டே இருந்தார்.

    பா.ஜ.க. சார்பில் நிஷிகாந்த் துபே எம்.பி. முதலில் பேசினார். அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். வெட்கம் வெட்கம் என்று கூறி கூச்சலிட்டனர். இதனால் சபையில் மீண்டும் கடும் அமளி ஏற்பட்டது.

    என்றாலும் விவாதம் தொடர்ந்து நடத்தப்பட்டது. இன்று பிற்பகல் ராகுல் காந்தி பேசுவார் என்று தெரிகிறது. காங்கிரஸ் சார்பில் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சசிதரூர், கவு ரவ்கோகாய், மணீஸ்திவாரி ஆகியோரும் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பா.ஜ.க. சார்பில் 5 மத்திய மந்திரிகள் பேசுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதிஇராணி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ ஆகியோர் எதிர்க்கட்சிகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் பிரதமர் மோடி பதில் அளிப்பார் என்பது இன்று மதியம் வரை உறுதி செய்யப்படவில்லை.

    எதிர்க்கட்சிகளின் பரபரப்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (புதன்கிழமை) விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் பிரதமர் மோடி பதில் அளிப்பார் என்று தெரிகிறது.

    தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும். தற்போது எம்.பி.க்களின் எண்ணிக்கை 570 ஆக உள்ளது. எனவே ஓட்டெடுப்பில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வேண்டுமானால் 270 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு அந்த அளவுக்கு பலம் இல்லை. 142 எம்.பி.க்களின் ஆதரவு மட்டுமே எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது.

    பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 332 எம்.பி.க்கள் பலம் உள்ளது. மேலும் பிஜு தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக உள்ளன. எனவே பா.ஜ.க.வுக்கு ஆதரவாக 366 எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆகையால் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

    Next Story
    ×