என் மலர்
இந்தியா

படிக்கும் காலத்தில் இது தேவைதானா என எதிர்ப்பு- கல்லூரி காதல் ஜோடி திருமணம் செய்துவிட்டு தற்கொலை
- கல்லூரியில் படிக்கும் போது இருவரும் நட்பாக பழகி வந்தனர். நட்பு காதலாக மாறியது.
- மகன், மகளை காணாததால் அவர்களது பெற்றோர்கள் புங்கனூர் போலீசில் புகார் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், அன்னமய்யா மாவட்டம், செட்டேவாரி பள்ளியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். லதிகம் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது வாலிபர்.
இருவரும் புங்கனூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரியில் படிக்கும் போது இருவரும் நட்பாக பழகி வந்தனர். நட்பு காதலாக மாறியது.
இவர்களது காதல் விவகாரம் அவர்களது பெற்றோருக்கு தெரிய வந்தது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதல் தேவைதானா என இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி திருப்பதி அருகே உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். மகன், மகளை காணாததால் அவர்களது பெற்றோர்கள் புங்கனூர் போலீசில் புகார் செய்தனர்.
பெற்றோர்கள் போலீசில் புகார் செய்ததை அறிந்த காதல் ஜோடி எப்படியாவது தங்களை பிரித்து விடுவார்கள் என எண்ணி கவலை அடைந்தனர்.
இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி திருப்பதி பீளேரு சோதனை சாவடி அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றனர். அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
நேற்று மாலை வனப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் காதல் ஜோடி தூக்கில் தொங்குவதை கண்டனர்.
இது குறித்து பாக்ராபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்கில் தொங்கியவர்களின் பிணங்களை மீட்டனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






