search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆன்லைன் நிறுவன இணையத்தை முடக்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா வாலிபர்
    X

    ஆன்லைன் நிறுவன இணையத்தை முடக்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஆந்திரா வாலிபர்

    • போலீசார் லட்சுமிபதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெங்களூருவில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.
    • அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்ட அவர் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

    பெங்களூரு:

    தகவல் தொழில்நுட்ப நகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியுடன் தொடர்புடைய தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. அந்த கூப்பன்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி அந்த நிறுவனத்தின் இணையதளத்தின் சர்வரை முடக்கி தங்கம், வெள்ளி, மோட்டார் சைக்கிள்கள், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி மர்ம நபர் ஒருவர் மோசடி செய்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனம் சார்பில் தென்கிழக்கு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தனியார் வங்கியின் தொடர்புடைய இணையதளத்தின் சர்வரை முடக்கி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த லட்சுமிபதி (வயது 23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    புகழ் பெற்ற ஒரு கல்லூரியில் கணினி அறிவியலில் பி.டெக் படித்துள்ள லட்சுமிபதி ஹேக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையத்தை முடக்கி, வாடிக்கையாளர்களின் பரிசுக்கூப்பன்களை திருடி பொருட்களை வாங்கி குவித்துள்ளார். மேலும் பரிசுக்கூப்பன்களுக்கு வழங்கப்படும் வெகுமதி புள்ளியை (ரிவார்டு பாயிண்ட்) பணமாக மாற்றி உள்ளார். இந்த கூப்பன்களை கணிசமான அளவு டிஜிட்டல் கரன்சியாக மாற்றியுள்ளார்.

    இதில் அவர் வாங்கி குவித்த 5 கிலோ தங்க நகைகள், தங்க கட்டிகள், வெள்ளி பொருட்கள், செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள், ரூ.11 லட்சம் ரொக்கம் என ரூ.4¼ கோடி பொருட்களை போலீசார் மீட்டனர். இதுமட்டுமல்லாது லட்சுமிபதிக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்த ரூ.29 லட்சம் முடக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் லட்சுமிபதியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பெங்களூருவில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர்.

    ஹேக்கர் லட்சுமி பதியிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதனை பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் தயானந்த் பார்வையிட்டார்.

    இது குறித்து போலீஸ் கமிஷனர் கூறுகையில் பெங்களூருவில் இயங்கி வந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் இணையத்தை முடக்கி ரூ.4.¼ கோடி பொருட்களை வாங்கி மோசடி செய்த ஆந்திர ஹேக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இதற்கு முன்பு பெங்களூருவில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதுவே முதல் வழக்கு ஆகும். இவர் துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை செய்துள்ளார். 2 வருடங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். அதில் அனைத்து விசயங்களையும் தெரிந்து கொண்ட அவர் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றார்.

    Next Story
    ×