search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்
    X

    குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்

    • ராணுவம், போலீசார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
    • ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் மீட்புப் பணி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் (2) என்கிற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் அப்போது கூலி வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது நேற்று இரவு 8 மணியளவில் சிறுவன் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து 20- 25 அடி ஆழத்தில் சிக்கினான். இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து உள்ளூர் பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் அகமதாப்பாத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 கி.மீ தொலைவில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுவிற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ராணுவம், போலீசார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, இரவு 10.45 மணியளவில் குழந்தையை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர்.

    பின்னர் சிறுவன் திரங்காத்ரா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் மீட்புப் பணி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×