search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சொமேட்டோவில் சைவ உணவு டெலிவரி அணி அறிமுகம் - உணவில் தீண்டாமையா?
    X

    சொமேட்டோவில் சைவ உணவு டெலிவரி அணி அறிமுகம் - உணவில் தீண்டாமையா?

    • சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு எப்படி சமைக்கப்படுகிறது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்
    • இந்தியாவில் முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன

    சைவ உணவுகளை மட்டும் டெலிவரி செய்வதற்கு தனி அணியை சொமேட்டோ நிறுவனம் உருவாக்கியுள்ளது.

    வழக்கமான சிவப்பு நிறம் இல்லாமல் இந்த சைவ டெலிவரி அணிக்கு பச்சை நிறத்தில் பேக், சீருடைகள் அளிக்கப்பட்டுள்ளன. செயலியில் Pure Veg Mode மூலம் இதனைப் பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அசைவ உணவகங்களில் சமைக்கப்படும் சைவ உணவுகளைக் கூட, இந்த சைவ அணி டெலிவரி செய்ய மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை தனது எக்ஸ் பக்கத்தில் சொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.

    அந்த பதிவில், உலகளவில் இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, மற்றும் அவர்களின் உணவு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    சொமேட்டோவின் இந்த புதிய நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சொமேட்டோ நிறுவனத்தை பலரும் புறக்கணிப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் முஸ்லீம் டெலிவரி ஊழியர்கள் விநியோகித்த உணவை மக்கள் ஏற்க மறுத்த நிகழ்வுகள் பல நடந்துள்ளன. குறிப்பாக எங்கள் உணவு தீட்டு பட்டு விட்டது என்று அவர்கள் அதற்கு காரணம் கூறினார்கள்.

    இத்தகைய பிரச்சினைகளை களைவதற்கு முயற்சி எடுக்காமல், ஏற்கனவே இருக்கும் பாகுபாடுகளை அதிகரிக்கும் வேலைகளை சொமேட்டோ செய்து வருகிறது என்று நெட்டிசன்கள் இந்த புதிய நடவடிக்கையை விமர்சித்து வருகின்றனர்.

    சொமேட்டோவின் இந்த புதிய முன்னெடுப்பை இந்த பார்வையில் தான் நாம் பார்க்க வேண்டுமா?

    சொமேட்டோவின் இந்த புதிய சைவ அணி அறிவிப்பில் என்ன பிரச்சனை உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் தங்களின் உணவு, சைவ உணவு மட்டும் தயாரிக்கப்படும் உணவகங்களில் இருந்தும் சைவ உணவை மட்டும் டெலிவரி செய்யும் ஊழியர்களிடம் இருந்தும் வாங்க விரும்புவதால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லையே எனறு ஒரு தரப்பினர் வாதம் முன்வைக்கின்றனர்.

    ஆனால், ஏற்கனவே சொமேட்டோ ஆப்-இல் எந்த உணவகங்களில் இருந்து நமக்கு எந்த உணவு வேண்டும் என்பதை ஆர்டர் செய்யும் வசதி உள்ளது. ஆகவே இந்த புதிய நடவடிக்கையால் சைவ உணவு டெலிவரி செய்யும் ஊழியர் சைவ உணவுகளை மட்டுமே டெலிவரி செய்வார். அசைவ உணவுகளை டெலிவரி செய்யமாட்டார் என்பது மட்டுமே இதில் புதிய அம்சம்.

    எதற்காக இந்த புதிய அம்சம் தேவைப்படுகிறது?. ஒருவேளை சொமேட்டோ டெலிவரி ஊழியரின் உணவு பையில், ஒரு தயிர் சாதமும், பிரியாணியும் டெலிவரிக்காக உள்ளது. இதில் பிரியாணி சாப்பிடுபவர் அதன் பக்கத்தில் எந்த உணவு உள்ளது, அது தயிர் சாதமா இல்லையா என்று கவலைப்படுவதில்லை.

    ஆனால், அதே சமயம் சைவ உணவு மட்டும் உண்பவர் தனது உணவுக்கு பக்கத்தில் ஒரு அசைவ உணவு இருந்து விடுமோ, அதனால் தனது சைவ உணவு தீட்டு பட்டு விடுமோ என்ற அச்சம் தான் இந்த புதிய அறிவிப்பிற்கு வழிவகுத்துள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.

    ஏன் அந்த அச்சம் ஏற்படுகிறது? சாம்பார் சாதம் பக்கத்தில் மீன் குழம்பு இருந்தால் என்ன? ரயிலில் தியேட்டரில் நமக்கு பக்கத்தில் இருப்பவர் யார் என்று பார்த்து பார்த்து தான் நாம் உட்காருகிறோமா? சைவ உணவு சாப்பிடும் ஒருவர் பக்கத்தில் அசைவ உணவு சாப்பிடும் ஒருவர் உட்கார கூடாதா? அப்படி யாராவது சொன்னால் அதற்கு தீண்டாமை என்று பெயர்.

    அப்படிப்பட்ட தீண்டாமையை தான் சொமேட்டோ ஊக்குவிக்கிறதா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. ஆகவே உணவில் தீண்டாமையை ஊக்குவிக்கும் வேலையைதான், சொமேட்டோவின் இந்த புதிய Pure Veg Mode உருவாக்க வாய்ப்புள்ளது.

    இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள், பழங்குடிகள், இஸ்லாமியர்கள் அசைவ உணவு சாப்பிடுகிறார்கள். இந்தியாவில் 19% மக்கள் மட்டும்தான் சைவ உணவுகளை உண்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×