search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுதானிய உணவு முறையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்- பிரதமர் மோடி
    X

    சிறு தானியங்கள், பிரதமர் மோடி

    சிறுதானிய உணவு முறையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்- பிரதமர் மோடி

    • நமது வேதங்களிலே தினை பற்றிய குறிப்பு காணப் படுகிறது.
    • புறநானூறு மற்றும் தொல்காப்பியத்திலும் கூட, இவற்றைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது.

    பிரதமர் மோடி இன்று மனதில் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    ஐ.நா.சபை 2023ஆம் ஆண்டினை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ளது. இந்தியாவின் இந்த முன்மொழிவிற்கு 70ற்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்தது. இன்று உலகெங்கிலும் சிறுதானியங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

    கடந்த சில காலமாகவே நாட்டிற்கு எந்த ஒரு அயல்நாட்டு விருந்தினர் வந்தாலும், குடியரசுத் தலைவர் வந்தாலும், உணவிலே இந்தியாவின் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை அவர்களுக்கு அளிக்க முயற்சிக்கிறேன்; இதிலே என்னுடைய அனுபவம் என்னவாக இருக்கிறது என்றால், இந்த முக்கியஸ்தர்களுக்கு இந்தப் பதார்த்தங்கள் மிகவும் பிடித்துப் போய் விடுகின்றன,

    நமது சிறுதானியங்கள் பற்றிய பல தகவல்களைத் திரட்டவும் அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சிறுதானியங்கள் என்பவை நமது பண்டைய காலம் தொட்டே நமது விவசாயம், கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றின் அங்கமாக இருந்து வருகின்றன.

    நமது வேதங்களிலே தினை பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இதைப் போலவே புறநானூறு, தொல்காப்பியத்திலும் கூட, இவற்றைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் தேசத்தின் எந்த ஒரு பாகத்திற்குச் சென்றாலும், அங்கே இருக்கும் மக்களின் உணவு முறைகளில், பல்வேறு வகையான சிறுதானிய வகைகள் இடம் பெற்றிருப்பதை உங்களால் காண முடியும்.

    நமது கலாச்சாரத்தைப் போலவே, சிறுதானியங்களிலும் கூட பலவகைகள் காணக் கிடைக்கின்றன. வரகு, சோளம், சாமை, ராகி, கம்பு, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா முன்னணி நாடாக உள்ளது.

    இந்த முயற்சியை வெற்றி பெறச் செய்ய பெரும் பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் இருக்கிறது. நாம் அனைவரும் இணைந்து இதை ஒரு மக்கள் இயக்கமாக ஆக்க வேண்டும், நாட்டு மக்களிடம் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் அதிகரிக்க வேண்டும். சிறுதானியங்கள் விவசாயிகளுக்கும் அதிக லாபகரமானது.

    இன்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவுமுறை தொடர்பாக மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்த்தால், சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, கனிமச்சத்து ஆகியன நிறைவான அளவில் இருக்கின்றன.

    சிறுதானியங்களில் ஒன்றல்ல, பல ஆதாயங்கள் இருக்கின்றன. உடல் பருமனைக் குறைப்பதாகட்டும், நீரிழிவாகட்டும், உயர் இரத்த அழுத்தமோ, இருதயம் தொடர்பான நோய்கள் அபாயமாகட்டும், இவற்றைக் குறைக்கிறது. இதோடு கூடவே, வயிறு மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது.

    ஊட்டச்சத்துக் குறைபாட்டோடு போராடவும் சிறுதானியங்கள் கணிசமான உதவி புரிகின்றன, ஏனென்றால், இவை புரதங்களோடு கூடவே உடலுக்கு சக்தியையும் அளிக்கின்றன. தேசத்திலே இன்று சிறுதானியங்களுக்கு ஊக்கம் அளிக்க, நிறைய விஷயங்கள் செய்யப்படுகின்றன.

    இவற்றோடு தொடர்புடைய ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் மீது கவனம் செலுத்தப்படுவதோடு, விவசாயிகள்-உற்பத்தியாளர் சங்கங்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது; இதன் வாயிலாக விளைச்சலை அதிகரிக்க முடியும். விவசாயிகளுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், சிறுதானியங்களை நீங்கள் அதிக அளவு பயிர் செய்ய வேண்டும்,

    இன்று பல ஸ்டார்ட் அப்புகளும் கூட, சிறுதானியங்கள் துறையில் பணி புரிவதைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இவற்றிலே சிலர் சிறுதானிய குக்கீஸ், சிறுதானிய பேன் கேக்குகள், சிறுதானிய தோசை கூடத் தயாரிக்கிறார்கள். அதே போல, சிறுதானிய சக்தி வில்லைகளும், சிறுதானிய காலை உணவும் தயார் செய்யப்பட்டு வருகின்றது. இந்தத் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் நான் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பண்டிகைகளுக்கான இந்த வேளையில் நாம் நமது பல தின்பண்டங்களிலும் சிறுதானிய வகைகளைப் பயன்படுத்துகிறோம். உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களின் படங்களை சமூக ஊடகங்களில் நீங்கள் கண்டிப்பாகப் பகிருங்கள்; மக்கள் மத்தியில் சிறுதானியங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க இது உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×