search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா?: ரெயில்வே அமைச்சகம் விளக்கம்
    X

    ரெயிலில் குழந்தைகளுக்கு டிக்கெட் வாங்க வேண்டுமா?: ரெயில்வே அமைச்சகம் விளக்கம்

    • ரெயில்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம்.
    • இந்த விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

    புதுடெல்லி :

    ரெயில்களில் பயணம் செய்கிற 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால், அவர்களுக்கென்று தனி இருக்கையோ, படுக்கையோ வேண்டுமென்றால், அது வழங்கப்படமாட்டாது.

    அதே நேரத்தில் பயணிகள், 5 வயதுக்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு தனி இருக்கையோ, படுக்கையோ வேண்டுமென்றால், அதற்காக அவர்கள் பெரியவர்களைப்போன்று முழு கட்டணமும் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும். இது தற்போது பின்பற்றப்படுகிற நடைமுறை.

    இந்த நடைமுறை, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி ரெயில்வே அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன; 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரெயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெற வேண்டும் என்று சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

    இது ஒரு பிரிவினரிடத்தில் கோபத்தை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களில் கடுமையாக சாடினர்.

    இதையொட்டி ரெயில்வே அமைச்சகம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    "ரெயிலில் குழந்தைகள் பயணம் செய்வதற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன, 1 வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் பெற வேண்டும்" என சமீபத்தில் சில ஊடக தகவல்கள், அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

    இது தவறாக வழிநடத்துவதாகும். ரெயிலில் பயணம் செய்கிற குழந்தைகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை ரெயில்வே மாற்றவில்லை.

    5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரெயிலில் பயணிப்பதற்கு தனி படுக்கை வசதி வேண்டுமென்றால், டிக்கெட் பெற வேண்டும். அவர்களுக்கென்று தனிபடுக்கை வசதி தேவையில்லை என்றால் அவர்கள் ஏற்கனவே இருப்பதை போலவே இலவசமாகவே பயணிக்கலாம்.

    இவ்வாறு ரெயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    எனவே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ரெயில்களில் தனி படுக்கை வசதியின்றி பயணம் செய்வதற்கு டிக்கெட் வாங்கத்தேவையில்லை என்பது தெளிவாகி உள்ளது.

    Next Story
    ×