search icon
என் மலர்tooltip icon

  இந்தியா

  சிவசேனாவின் எதிர்காலம் என்ன?- அரசியல் நிபுணர்கள் கருத்து
  X

  சிவசேனாவின் எதிர்காலம் என்ன?- அரசியல் நிபுணர்கள் கருத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பால் தாக்கரேவால் நிறுவப்பட்ட சிவசேனா கட்சியின் நிலை மோசமாகி உள்ளது.
  • சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே அணி உரிமை கோருகிறது.

  மும்பை :

  மராத்தியர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி 1966-ம் ஆண்டு சிவசேனாவை பால்தாக்கரே தொடங்கினார். பின்நாட்களில் தீவிர இந்துத்வா கொள்கையை அக்கட்சி கடைப்பிடித்தது.

  சிவசேனா மூன்று தலைமுறையாக தாக்கரே குடும்பத்தால் வழிநடத்தப்பட்டு வருகிறது. 56 ஆண்டுகளில் பல ஏற்ற இறங்கங்களை கண்டுள்ள இந்த கட்சி, தற்போது அரசியல் சூறாவளியில் சிக்கி தவிக்கிறது. தாக்கரே குடும்ப விசுவாசியாக கருதப்பட்ட ஏக்நாத் ஷிண்டே கட்சியில் பிளவை ஏற்படுத்தி, மொத்தம் உள்ள 55 எம்.எல்.ஏ.க்களில் 40 எம்.எல்.ஏ.க்களை தன்வசப்படுத்தி பா.ஜனதாவுடன் கைகோர்த்து ஆட்சியை கைப்பற்றி உள்ளார்.

  தாக்கரே குடும்பத்தில் இருந்து யாரும் அரசு பதவிக்கு வராத நிலையில், முதல் முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரே ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டு உள்ளனர். 19 எம்.பி.க்களில், 12 பேரையும் ஏக்நாத் ஷிண்டே தன்வசப்படுத்தி கொண்டுள்ளார். இது உத்தவ் தாக்கரேக்கு மற்றொரு பின்னடைவு. அடுத்து சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே அணி உரிமை கோருகிறது.

  சிவசேனாவின் கோட்டையான தானே மாவட்டத்தில் அடிமட்ட கட்சி தொண்டர்கள் பலர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்துள்ளனர். இதனால் பால் தாக்கரேவால் நிறுவப்பட்ட சிவசேனா கட்சியின் நிலை மோசமாகி உள்ளது. இதுநாள் வரை தாக்கரே என்றால் சிவசேனா, சிவசேனா என்றால் தாக்கரே என்பது தான் அந்த கட்சியின் மரபு. சிவசேனாவுக்கு தலைமை அலுவலகம் சேனா பவனாக இருக்கலாம்.

  ஆனால் தாக்கரே குடும்பத்தினர் வசிக்கும் 'மாதோஸ்ரீ' தான் சிவசேனாவின் கட்டுப்பாட்டு மையம். தற்போது பெரும்பகுதி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தாக்கரே குடும்பத்தினர் பிடியில் இருந்து நழுவி போய் விட்டார்கள். எனவே சிவசேனா கட்சிக்கு தாக்கரே குடும்ப மரபு மங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிவசேனாவின் எதிர்காலம் குறித்து அரசியல் நிபுணர்கள் கருத்து கூறி உள்ளனர்.

  பால்தாக்கரே பற்றி புத்தகத்தை எழுதியுள்ள அரசியல் விமர்சகரான சுஜாதா ஆனந்தன் கூறியதாவது:-

  சிவசேனாவில் தாக்கரேவின் மரபு மறைவதாக கட்சி பிளவுபட்ட ஒரு மாதத்திற்குள் கூறுவது மிக விரைவாக எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும். அடுத்த தேர்தலில் சிவசேனாவினர் யாருடன் திரள்வார்கள் என்பதை பார்க்க வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து செல்வது பெரிய விஷயம் அல்ல.

  சகன் புஜ்பாலும், நாராயண் ரானேவும் முன்பு சில எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து சிவசேனாவை பிளவுபடுத்தினர். ஆனால் இரு தலைவர்களை தவிர, மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைந்தனர். உத்தவ் தாக்கரே இந்துத்வாவை ஒரு வன்முறையற்ற, ஆனால் பக்தியுள்ள இந்து என்று மறுவரையறை செய்துள்ளார். இது பல இந்துக்களை ஈர்த்துள்ளது. மராத்தி மற்றும் இந்துத்வா வாக்குகள் என்பது ஒரு நல்ல கலவையாகும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  சிவசேனாவை அடிப்படையாக கொண்ட "ஜெய் மகாராஷ்டிரா" புத்தகத்தின் ஆசிரியர், அரசியல் ஆய்வாளர் பிரகாஷ் அகோல்கர், "எதிர்கால தேர்தலில் இரு சிவசேனா பிரிவினரும் ஒருவருக்கொருவர் போட்டியிடும்போது தான் தாக்கரே கவர்ச்சி மங்கிவிட்டதா என்பது தெரியவரும்.

  மராட்டியத்தில் பல்வேறு உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பெரும்பாலான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்துவிட்டதால் தாக்கரேயின் மரபு மங்கிவிட்டதாக அர்த்தமில்லை. கட்சியின் எதிர்காலத்தை இவ்வளவு விரைவாக கணிக்க முடியாது. எம்.எல்.ஏ.க்கள் வருவார்கள், போவார்கள். இறுதி முடிவை கட்சி தொண்டர்களும், வாக்காளர்களும் தான் எடுப்பார்கள். தேர்தலுக்கு பிறகு தான் உண்மை என்னவென்று தெரியவரும். முக்கிய தலைவர்கள் வெளியேறியதால், எஞ்சியவர்களை வைத்து கட்சியை புதுப்பிக்க உத்தவ் தாக்கரே மிக கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.

  அரசியல் ஆய்வாளரான அபய் தேஷ்பாண்டே, சிவசேனாவில் ஏற்பட்டு உள்ள செங்குத்தான பிளவு தவிர்க்க முடியாததாகி விட்டதாக கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சிவசேனா அதிருப்தியாளர்கள் சிவசேனாவில் இருந்து வெளியேற விரும்பவில்லை. அவர்கள் கட்சியை விரும்புகிறார்கள். சிவசேனா கட்சியை 'மாதோஸ்ரீ'யை விட்டு வெளியேற்ற பா.ஜனதா விரும்புகிறது. பால்தாக்கரே இல்லாத தருணத்தில் கட்சியில் மிகப்பெரிய பிளவை உத்தவ் தாக்கரே கண்டுள்ளார். இருப்பினும் கட்சியில் தாக்கரே மரபு நீடிக்கும். ஆனால் சிவசேனாவுக்கு ஒருவர் மட்டும் உரிமையாளராக இருக்கக்கூடாது" என்றார்.

  சிவசேனா தொழிலாளர் பிரிவான பாரதிய கம்கர் சேனாவின் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணா ஹெக்டே கூறுகையில், கட்சியின் அனைத்து தரப்பும் உத்தவ் தாக்கரேவுடன் உள்ளன. மக்கள் பிரதிநிதிகள் வெளியேறி இருக்கலாம். ஆனால் 60 லட்சம் உறுப்பினர்களை கொண்ட கட்சி மங்கி விடாது. இது ஒரு தற்காலிக பின்னடைவு இந்த நெருக்கடியை நாங்கள் சமாளிப்போம்" என்றார்.

  Next Story
  ×