என் மலர்
இந்தியா

காதலிக்கு ஐபோன் பரிசு: தாயின் நகைகளை திருடிய 9ம் வகுப்பு மாணவர்
- வீட்டிற்கு திரும்பிய சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- சிறுவனின் பள்ளி நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தனது காதலிக்கு ஆப்பிள் ஐபோன் வாங்கவும், பிறந்தநாள் விழாவுக்கு செலவு செய்யவும் தாயின் தங்கத்தை திருடிய சிறுவனை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லி நஜாப்கரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
டெல்லி நஜாப்கரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து தங்க நகைகள் காணாமல் போனதையடுத்து சிறுவனின் தாய் புகார் அளித்துள்ளார். நகை திருட்டு சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 3-ந்தேதி சிறுவனின் தாய் போலீசில் புகார் அளித்தார்.
அதில், தனது வீட்டில் இருந்து இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு ஜோடி தங்க கம்மல்கள் மற்றும் ஒரு தங்க மோதிரம் ஆகியவற்றை ஆகஸ்ட் 2-ந்தேதி அடையாளம் தெரியாத நபர் திருடி உள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டுக்குள் யாரும் வராதது, வெளியே செல்லாதது சிசிடிவி காட்சிகளில் கண்டு பிடிக்கப்பட்டது.
வீட்டிற்குள் உள்ள ஒருவரே இந்த குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று நினைத்த போலீசாரின் விசாரணையில், அந்த பெண்ணின் மைனர் மகன் குற்றம் நடந்ததிலிருந்து காணாமல் போனதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சிறுவனின் பள்ளி நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் ரூ.50,000 மதிப்புள்ள புதிய ஐபோன் வாங்கியுள்ளார் என்பது தெரிய வந்தது. வீட்டிற்கு திரும்பிய சிறுவனை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், அவனிடம் இருந்து ஆப்பிள் மொபைல் போனை மீட்டனர்.
சிறுவன் நஜாப்கரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும், படிப்பில் ஆர்வம் இல்லாமல் சராசரி மதிப்பெண்கள் எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
பள்ளியில் சிறுவன் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியுடன் தொடர்பு வைத்திருப்பதாக அவரது நண்பர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
தனது காதலியின் பிறந்தநாளில் பிரமிக்க வைக்கும் வகையில் அவருக்கு பரிசு கொடுக்க விரும்பிய சிறுவன் தனது தாயிடம் பணம் கேட்டுள்ளார். குடும்ப வறுமை காரணமாக பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்த சிறுவனின் தாய், படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார். தாய் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த சிறுவன் வீட்டில் இருந்து நகைகளை திருடி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காணாமல்போன ஒரு ஜோடி தங்க கம்மல்கள், ஒரு தங்க மோதிரம் மற்றும் ஒரு செயின் மீட்கப்பட்டது. நகையை வாங்கியவரில் ஒருவரான கமல் வர்மாவை போலீசார் கைது செய்தனர்.






