என் மலர்tooltip icon

    இந்தியா

    சாலையோரம் ஜூஸ் விற்பவர்.. தள்ளுவண்டி முட்டை வியாபாரி -  ரூ.13 கோடி GST வரி கேட்டு வந்த நோட்டீஸால் ஷாக்
    X

    சாலையோரம் ஜூஸ் விற்பவர்.. தள்ளுவண்டி முட்டை வியாபாரி - ரூ.13 கோடி GST வரி கேட்டு வந்த நோட்டீஸால் ஷாக்

    • எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நாம் ஏன் சிரமப்பட வேண்டும்
    • நாங்கள் உணவுக்கே சிரமப்படுகிறோம்.. எங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், எங்கள் மகன் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? என்று ரஹீஸின் தாய் கூறினார்.

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முட்டை கடைக்காரருக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் பறந்துள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில், தள்ளுவண்டியில் முட்டை விற்று பிழைப்பு நடத்துபவர் சுமன். இவருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோடீஸில், பிரின்ஸ் சுமன், அரசுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆக ரூ.6 கோடி பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த நோடீஸில், 2022 ஆம் ஆண்டு டெல்லியில் சுமனின் பெயரில் "பிரின்ஸ் எண்டர்பிரைசஸ்" என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தோல், மரம் மற்றும் இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்டது என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய சுமன், "நான் வண்டியில் மட்டுமே முட்டைகளை விற்கிறேன். நான் டெல்லிக்கே இதுவரை சென்றதில்லை. பின் அங்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது என்பது எப்படி சாத்தியம்" என்று தெரிவித்துள்ளார்.

    சிறிய மளிகைக் கடை நடத்தி வரும் சுமனுடைய தந்தை ஸ்ரீதர் சுமன் பேசுகையில், "எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நாம் ஏன் சிரமப்பட வேண்டும்?" என்றார்.

    சுமனின் தனிப்பட்ட ஆவணங்களை யாரோ தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அவருக்கு தெரிந்த வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதை விசாரிக்க காவல்துறை மற்றும் வருமான வரி அதிகாரிகளை அணுகியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

    இதற்கு மத்தியில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ஜூஸ் விற்பனையாளரான எம்.டி. ரஹீஸுக்கு ரூ.7.5 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவருக்கு அனுப்பப்பட்ட நேட்டீஸில், 2020-21 ஆம் ஆண்டில் அவரது பெயரில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போலி பரிவர்த்தனைகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய அவர், "இந்த நோட்டீஸ் எதற்க்கு என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஜூஸ் மட்டுமே விற்கிறேன். இவ்வளவு பணத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. அரசாங்கம் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு ஏழை. நான் ஒரு பொய் வழக்கில் சிக்க வைக்கப்படக்கூடாது" என்று தெரிவித்தார்.

    "நாங்கள் அன்றாட உணவுக்கே சிரமப்படுகிறோம்.. எங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், எங்கள் மகன் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்?" என்று ரஹீஸின் தாய் கூறினார்.

    2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை அளிக்க ரஹீஸின் தனிப்பட்ட ஆவணங்கள் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஐடி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×