என் மலர்
இந்தியா

பாங்காக்கில் இருந்து கேரளா வந்த விமானத்தில் அரியவகை விலங்குகள்- 'மக்காவ் கிளி' கடத்திய தம்பதி கைது
- அரியவகை விலங்குகள் மற்றும் கிளியை கொண்டு வந்தது குறித்து கணவன்-மனைவி இருவரிடமும் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
- கணவன்-மனைவி இருவரையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து கேரளா வரக் கூடிய விமானங்களில் சட்டவிரோதமாக தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள், போதை பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. அதனை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும் கேரள விமான நிலையங்களுக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை பொருட்கள் உள்ளிட்டவை கடத்தி கொண்டு வருவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்தில் இருந்து கொச்சி வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் அரிய வகை விலங்குகள் மற்றும் கிளியை கடத்தி கொண்டு வந்த கணவன்-மனைவி சிக்கினர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவை சேர்ந்தவர் ஜாப்சன் ஜாய்(வயது28). இவரது மனைவி ஆர்யமோல்(28). இவர்கள் இருவரும் தாய்லாந்தில் இருந்து கொச்சி வந்த தாய் ஏர்வேஸ் விமானத்ததில் வந்தனர். அவர்களின் உடமைகளை சுங்கத் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த சாமான்களில் ஒரு சிறிய பெட்டியில் அரியவகை விலங்குகளான "மார்மோசெட்" என்று அழைக்கப்படும் 3 குரங்கு குட்டிகள், 2 வெள்ளை உதடு புலி குட்டிகள் மற்றும் "ஹியான்சித் மக்காவ்" இன கிளி ஆகியவை இருந்தன.
இந்த விலங்கினங்கள் மற்றும் பறவையை இந்தியாவில் வைத்திருப்பது சடடப்படி தடை செய்யப்பட்டுள்ளதால் அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அரியவகை விலங்குகள் மற்றும் கிளியை கொண்டு வந்தது குறித்து கணவன்-மனைவி இருவரிடமும் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தங்களிடம் சிலர், இந்த பெட்டிகளை கொச்சி விமானநிலையத்தில் பெற்றுக்கொள்வார்கள் என்று கூறி கொடுத்ததாகவும், அதன்பேரில் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர். அவர்கள் கைது செய்யப்பட்ட இருவரையும், பறிமுதல் செய்யப்பட்ட குரங்குகள் மற்றும் கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.






