என் மலர்
இந்தியா

சந்திரபாபு நாயுடு கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பயங்கர வன்முறை - போலீசார் தடியடி
- முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு புங்கனூர் பகுதிக்கு சென்றார்.
- அவரது கான்வாயை தடுத்து நிறுத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் முயற்சி செய்தனர்.
அமராவதி:
ஆந்திர அரசின் நீர் மேலாண்மை திட்ட பணிகளைப் பார்வையிட தெலுங்கு தேச கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதிக்குச் சென்றார். அவரை தடுத்து நிறுத்துவோம் என ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று திட்டமிட்டபடி சந்திரபாபு நாயுடு புங்கனூர் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரது கான்வாயை தடுத்து நிறுத்த ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் முயற்சித்தனர்.
அப்போது அங்கு தெலுங்கு தேசம் கட்சியினரும் குவிந்தனர். இதனால் இரு கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் கற்கள், செருப்பு, சோடா பாட்டில், பீர் பாட்டில் ஆகியவற்றால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
கட்சி தொண்டர்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி மேற்கொண்டனர். போலீசார் நடத்திய தடியடியில் இரு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் ஆவேசமடைந்த கட்சித் தொண்டர்கள் போலீசாரின் இரு வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்ட கட்சித் தொண்டர்களை விரட்டியடித்தனர். கட்சித் தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட போலீசாரும் காயமடைந்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.






