என் மலர்tooltip icon

    இந்தியா

    8 மத்திய மந்திரிகள் பதவி பறிப்பு? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை
    X

    8 மத்திய மந்திரிகள் பதவி பறிப்பு? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

    • ஒவ்வொரு துறை வாரியாக மந்திரிகளின் செயல்பாடுகள் ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
    • தற்போதைய மத்திய மந்திரிகளில் சிலர் கோவில்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

    மத்திய மந்திரி சபையை மாற்றி அமைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பிறகு மத்திய மந்திரி சபையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் மத்திய மந்திரி சபை மாற்றம் பெரிய அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு, பீகார் மாநிலங்களை கருத்தில் கொண்டு மந்திரி சபை மாற்றத்தில் அதிரடி இருக்கும் என்று பேச்சு நிலவுகிறது.

    மத்திய மந்திரி சபையை மாற்றும் போது யார்-யாருக்கு பிரதிநிதித்துவம் அளிப்பது என்பது பற்றி பிரதமர் மோடி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு துறை வாரியாக மந்திரிகளின் செயல்பாடுகள் ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.

    மத்திய மந்திரிகளின் சாதனைகளும் பட்டியலிடப்பட்டு வருகின்றன. இது மத்திய மந்திரிகள் இடையே கடும் கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் தங்களது துறையில் செய்துள்ள சாதனை விவரங்கள் மற்றும் திட்டங்களை சமூக வலைதளங்களில் தொகுத்து வெளியிட தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் மத்திய மந்திரி சபையில் இருக்கும் சில மூத்த மந்திரிகள் உள்பட 7 அல்லது 8 மந்திரிகள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பான தகவல்களை பிரதமர் அலுவலகம் உறுதி செய்ய மறுத்து விட்டது.

    7 அல்லது 8 மந்திரிகளுக்கு பதில் கூடுதலாக சிலரையும் சேர்த்து 10 முதல் 12 பேர் வரை மத்திய மந்திரி சபையில் புதுமுகங்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தற்போதைய மத்திய மந்திரிகளில் சிலர் கோவில்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

    2 மத்திய மந்திரிகள் நேற்று தங்களது சொந்த மாநிலத்துக்கு சென்று குலதெய்வ வழிபாட்டை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு மத்திய மந்திரி ஜோதிடரை பார்த்து தனது எதிர்காலம் பற்றி கேட்டறிந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×