search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா, அரசு வீட்டை காலி செய்ய உத்தரவு
    X

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா, அரசு வீட்டை காலி செய்ய உத்தரவு

    • அந்த பங்களா 6 மாத கால பயன்பாட்டுக்காக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி கொடுக்கப்பட்டது.
    • அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் 2016-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 19-ந் தேதி வரை, மக்கள் ஜனநாயகக்கட்சித் தலைவர் மெகபூபா முப்தி முதல்-மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர் வசிப்பதற்காக அரசு சார்பில் ஸ்ரீநகரில் குப்கார் சாலையில் அமைந்துள்ள 'பேர்வியூ' பங்களா ஒதுக்கப்பட்டது.

    ஆனால் அவர் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய பின்னரும் அந்த பங்களாவை காலி செய்யவில்லை.

    இந்த நிலையில் அவர் அந்த பங்களாவை அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் காலி செய்தாக வேண்டும் என்று காஷ்மீர் அரசினர் எஸ்டேட் துறையினர் வெளியேற்ற உத்தரவு அனுப்பி உள்ளனர்.

    அதில் மெகபூபா, உரிய அங்கீகாரம் இன்றி அந்த பங்களாவைத் தொடர்ந்து தன் வசம் வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    "முதல்-மந்திரி என்ற அடிப்படையில்தான் அந்த பங்களா அவருக்கு 6 மாத கால பயன்பாட்டுக்காக 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி கொடுக்கப்பட்டது. அது 2018-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி நீட்டிக்கப்பட்டது. அடுத்து எந்த நீட்டிப்பும் வழங்கப்படவில்லை" எனவும் அந்த உத்தரவில் கோடிட்டுக்காட்டி உள்ளனர்.

    இந்த நிலையில், அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் அந்த பங்களாவை மெகபூபா காலி செய்யவில்லை என்றால், காஷ்மீர் பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1988 இன் பிரிவு 5-ன் துணைப்பிரிவு (2) -ன் விதிகள் செயல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×