என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற 4-வது கட்ட தேர்தல்: 96 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
    X

    பாராளுமன்ற 4-வது கட்ட தேர்தல்: 96 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

    • கோடை வெயில் காரணமாக வாக்காளர்கள் காலையில் அதிக அளவில் வாக்குச் சாவடிக்கு திரண்டு வந்தனர்.
    • பாரதிய ஜனதா கூடுதல் இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3 கட்டத் தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.

    4-வது கட்டத் தேர்தல் இன்று (திங்கட்கிழமை) 96 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 96 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

    96 தொகுதிகளும் ஆந்திரா (25), தெலுங்கானா (17), உத்தரபிரதேசம் (13), மராட்டியம் (11), மேற்கு வங்காளம், மத்தியப்பிர தேசம் (தலா 8), பீகார் (5), ஒடிசா, ஜார்க்கண்ட் (தலா 4), ஆகிய 9 மாநிலங்களிலும் மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 1 தொகுதியும் இடம் பெற்றுள்ளன.

    கோடை வெயில் காரணமாக வாக்காளர்கள் காலையில் அதிக அளவில் வாக்குச் சாவடிக்கு திரண்டு வந்தனர். இதனால் ஓட்டுப்பதிவின் தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பான வாக்குப்பதிவை காண முடிந்தது. சில தொகுதிகளில் மக்கள் அதிகாலை 6.30 மணிக்கெல்லாம் ஓட்டுச்சா வடிக்கு வந்து வரிசையில் நின்று விட்டனர்.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் நேரம் செல்ல செல்ல விறுவிறுப்பு அதிகரித்தது. முதல் 2 மணி நேரங்களில் சராசரியாக 9 மாநிலங்களிலும் 10.35 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. அதிகபட்சமாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 11.78 சதவீத வாக்குகளை மக்கள் பதிவு செய்து இருந்தனர்.

    காலை 9 மணி நிலவரபடி உத்தரபிரதேசத்தில் 11.67, பீகாரில் 10.18, தெலுங்கானாவில் 9.51, ஒடிசாவில் 9.23, ஆந்திராவில் 9.05 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மராட்டியத்தில் 6.45 சதவீதம், காஷ்மீரில் 5.07 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த தேர்தலை விட இந்த தடவை தொடக்கத்தில் ஓட்டுப்பதிவு சற்று மந்தமாக இருந்தது.


    11 மணி நிலவரபடி 24.87 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    96 தொகுதிகளிலும் 17.7 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 8.97 கோடி பேர். பெண்கள்-8.73 கோடி பேர். இவர்கள் எளிதாக வாக்களிப்பதற்காக 96 தொகுதிகளிலும் ஒரு லட்சத்துக்கு 92ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    96 தொகுதிகளிலும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 12 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். சுமார் 20 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தபால் வாக்கு மூலம் தங்களது வாக்குகளை ஏற்கனவே பதிவு செய்து உள்ளனர்.

    4-ம் கட்டத் தேர்தலில் மொத்தம் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 170 பேர் பெண் வேட்பாளர்கள். மொத்த வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 10 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    1717 வேட்பாளர்களில் 476 பேர் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள். 360 வேட்பாளர்கள் மீது மிக கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளது. சுமார் 1000 வேட்பாளர்கள் பட்டப் படிப்பு படித்தவர்கள் என்று ஆய்வில் தெரியவந்து உள்ளது.

    இன்று ஓட்டுப்பதிவு நடந்து 96 தொகுதிகளில் 223 கட்சிகள் தங்களது 902 வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. 815 வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள். அரசிய்ல கட்சிகளில் பகுஜன் சமாஜ் கட்சி அதிகபட்சமாக 92 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.


    அதற்கு அடுத்தபடியாக பாரதிய ஜனதா 70 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 19 தொகுதிகளிலும், தெலுங்குதேசம், பாரத் ராஷ்ட்டீரிய சமிதி கட்சிகள் தலா 17 தொகுதிகளிலும், பார்வர்டு பிளாக் 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

    96 தொகுதிகளில் 64 தொகுதிகள் புது தொகுதிகளாகும். 32 தொகுதிகள் தனித் தொகுதிகளாகும்.

    96 தொகுதிகளிலும் சுமார் 19 லட்சம் தேர்தல் பணியாளர்கள் இன்று ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான தொகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    நக்சைலட்டுகள் அச்சுறுத்தல் இருக்கும் 6 தொகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவடைகிறது. 5 தொகுதிகளில் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.

    மற்ற தொகுகிகளில் மாலை 6 மணி வரை ஓட்டுப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றாலும் சில இடங்களில் வாக்காளர்களின் வருகை தாமதம் காரணமாக கூடுதல் அவகாசம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இன்று ஓட்டுப்பதிவு நடந்து வரும் 96 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு கணிசமான செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இந்த 96 தொகுதிகளில் 49 தொகுதிகளை பாரதிய ஜனதா கைப்பற்றி இருந்தது.

    காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. மற்ற கட்சிகளுக்கு 31 இடங்கள் கிடைத்திருந்தது. இந்த தடவை, பாரதிய ஜனதா கூடுதல் இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது.

    இன்று மாலை தேர்தல் நிறைவு பெற்றதும் 22 மாநிலங்களில் உள்ள 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவு பெறுகிறது. இதன் மூலம் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 70 சதவீதம் தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றுள்ளது.

    மீதமுள்ள 164 தொகுதிகளுக்கு வருகிற 20, 25 மற்றும் ஜூன் 1-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

    Next Story
    ×