என் மலர்
இந்தியா

'தனிப்பட்ட சொத்து அல்ல' - நேரு கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்கவேண்டும் என கலாச்சார அமைச்சகம் கடிதம்!
- ஆவணங்களைத் திருப்பி தர பலமுறை சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பப்பட்டது
- முக்கியமான வரலாற்று ஆவணங்கள் ஏன் இன்னும் பொது ஆவணக் காப்பகத்திற்கு வெளியே உள்ளன என்பதுதான் கேள்வி
கடந்த 2008ஆம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பி.எம்.எம்.எல்-இன் 2025 ஆண்டு தணிக்கையில் நேரு தொடர்பான ஏதேனும் ஆவணங்கள் காணாமல் போயுள்ளனவா என்று பாஜக எம்.பி சம்பித் பத்ரா மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்,' பிரதமர்கள் அருங்காட்சியகத்தில் நடப்பாண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நேரு தொடர்பான ஆவணங்கள் எதுவம் மாயமானதாக கண்டறியப்படவில்லை. அருங்காட்சியகம் வசமுள்ள ஆவணங்கள் ஆண்டுதோறும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இது தொடர்பாக கொள்கை எதுவும் வகுக்கப்படவில்லை,' என பதிலளித்து இருந்தார்.
இதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம், 'இறுதியில் உண்மை வெளியிடப்பட்டுவிட்டது. இனி மன்னிப்பு கேட்கப்போவது எப்போது,' என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏப்ரல் 29, 2008ம் ஆண்டு சோனியா காந்தியின் பிரதிநிதியான எம்.வி. ராஜன், ஜவஹர்லால் நேருவின் அனைத்து தனிப்பட்ட குடும்ப கடிதங்கள் மற்றும் குறிப்புகளை சோனியா காந்தி திரும்பப் பெற விரும்புகிறார் என கடிதம் எழுதியிருந்தார்.
இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, "நேருவின் தனிப்பட்ட ஆவணங்கள் உட்பட 51 அட்டைப்பெட்டிகள் 2008 இல் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டன". ஜனவரி 28, 2025 மற்றும் ஜூலை 3, 2025 ஆகிய தேதிகளில் அனுப்பப்பட்ட கடிதங்கள் உட்பட, இந்த ஆவணங்களைத் திருப்பி தர பலமுறை சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதனை அவர் இன்னும் திருப்பி தரவில்லை. ஜவஹர்லால் நேரு தொடர்பான ஆவணங்கள், இந்தியாவின் ஆவணப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும், அவற்றை தனியார் சொத்தாகக் கருத முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கஜேந்திர சிங் ஷெகாவத்,
'சோனியா காந்தியிடம் நான் மரியாதையுடன் கேட்கிறேன்: என்ன மறைக்கப்படுகிறது? என்ன ஒளித்து வைக்கப்படுகிறது? இந்த ஆவணங்களைத் திருப்பித் தராததற்கு சோனியா காந்தி கூறும் சாக்குப்போக்குகள் ஏற்கத்தக்கவை அல்ல. முக்கியமான வரலாற்று ஆவணங்கள் ஏன் இன்னும் பொது ஆவணக் காப்பகத்திற்கு வெளியே உள்ளன என்பதுதான் கேள்வி. இவை தனிப்பட்ட குடும்ப ஆவணங்கள் அல்ல. அவை இந்தியாவின் முதல் பிரதமருடன் தொடர்புடையவை மற்றும் நமது தேசிய வரலாற்றுப் பதிவின் ஒரு பகுதியாகும். இத்தகைய ஆவணங்கள் பொது ஆவணக் காப்பகங்களில் இருக்க வேண்டும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் அல்ல.' எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு டெல்லியில் வசித்த தீன் மூர்த்தி பவன் இல்லத்தில், அவரது நினைவாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை சார்பில் இது செயல்பட்டு வந்தது. தற்போது இந்த அருங்காட்சியகத்தை பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நுாலகம் என்று மத்திய அரசு பெயர் மாற்றியுள்ளது. இங்கு அனைத்து பிரதமர்கள் தொடர்பான பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.






