என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜக தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு... நாளை பதவியேற்கிறார் நிதின் நபின்!
    X

    பாஜக தேசிய தலைவராக ஒருமனதாக தேர்வு... நாளை பதவியேற்கிறார் நிதின் நபின்!

    • பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், அந்தந்த மாநில முக்கிய நிர்வாகிகளும் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
    • 2006 இடைத்தேர்தலில் முதல்முறையாக பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று டெல்லியில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் செயல்தலைவராக உள்ள நிதின் நபின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், தலைவர் பதவிக்கு போட்டியின்றி அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    பாஜக தேசிய தலைவராக தற்போது ஜே.பி.நட்டா இருந்து வருகிறார். அவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், தேர்தல் உள்ளிட்ட சில காரணங்களால் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தேசிய தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நிதின் அக்கட்சியின் தேசிய செயல்தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். அந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டதே, தேசியத் தலைவர் பதவிக்கு பாஜக மேலிடத்தின் தேர்வாக அவர் இருக்கிறார் என்பதை மறைமுகமாக கூறத்தான்.

    இன்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் நிறைவுற்றது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 37 வேட்புமனுக்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் கையெழுத்துகளும் இடம் பெற்றிருந்தன.

    மேலும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், அந்தந்த மாநில முக்கிய நிர்வாகிகளும் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    பாஜகவின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறைக்கான தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கே. லக்ஷ்மன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் அனைத்து மனுக்களும் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இப்போட்டியில் நிதின் மட்டுமே வேட்பாளராக இருந்ததால், அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20, 2026) அன்று முறைப்படி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதின் நபின் பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. தொடர்ந்து பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டம் விரைவில் கூட்டப்பட வாய்ப்புள்ளது.

    யார் இந்த நிதின் நபின்?

    பீகாரைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின். தந்தை மறைவால் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக 2006-ல் பாஜக எம்எல்ஏ ஆனார். அன்றுமுதல் தற்போதுவரை பாஜக எம்எல்ஏவாக தொடர்கிறார். மேலும் பீகார் அமைச்சரவையில் 2021 முதல் 2022 வரை சாலைப் போக்குவரத்து அமைச்சராகவும், 2024 முதல் 2025 வரை நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

    Next Story
    ×