என் மலர்
இந்தியா

நிர்மலா சீதாராமன் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும்: தேசியவாத காங்கிரஸ் கருத்து
- பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது.
- பாராமதிக்கு நிர்மலா சீத்தாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மும்பை :
புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சொந்த ஊர் ஆகும். இந்த பகுதி தேசியவாத காங்கிரசின் கோட்டையாக உள்ளது. தற்போது பாராமதி எம்.பி.யாக சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே உள்ளார்.
இந்தநிலையில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாராமதியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் பா.ஜனதா உள்ளது.
எனவே பாராமதியில் கட்சியை பா.ஜனதா பலப்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் பாராமதிக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்தநிலையில் நிர்மலா சீதாராமன் பாராமதியில் கவனம் செலுத்துவதைவிட்டு விட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ளது. இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைடு கிராஸ்டோ கூறியதாவது:-
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராமதி மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக அவர் பொருளாதாரத்தை மறந்துவிட்டார். பாராமதியில் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க அவர் மீண்டும் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பாராமதியில் சுப்ரியா சுலேயை பா.ஜனதா தோற்கடிக்கும் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை செய்யும் முயற்சியில் நிர்மலா சீதாராமன் அவர் மத்திய நிதி மந்திரி என்பதை மறந்துவிட்டார். எனவே அவர் பாராமதியைவிட்டு, விட்டு பொருளாதாரத்தில் கவனம் செலத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






