என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது
    X

    புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியது

    • மொத்தம் 427 எம்.பி.க்களின் ஆதரவு பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு கிடைக்கும்.
    • ஜனாதிபதி தேர்தலுக்கும், துணை ஜனாதிபதி தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

    புதுடெல்லி:

    துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது.

    ஜனாதிபதியை முன் அனுமதி பெறாமல் திடீரென சந்தித்து அவர் பதவி விலகியது நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை உருவாக்கி உள்ளது. அவரது பதவி விலகலுக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய சொல்லி நீக்கப்பட்டார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

    ஆனால் உடல்நலக்குறைவு காரணமாகவே பதவி விலகி இருப்பதாக ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார். என்றாலும் துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை நீடித்தபடியே உள்ளது.

    இதற்கிடையே புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. ஜெகதீப் தன்கர் கொடுத்த ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அரசுக்கு அனுப்பி வைப்பார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

    இந்த சூழ்நிலையில் துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இதைத்தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கும்.

    துணை ஜனாதிபதி பதவியில் இருப்பவர் உயிரிழப்பு, ராஜினாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக்காலமான 5 ஆண்டுகளுக்குள் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விதியின்படி அடுத்த புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடவடிக்கைகள் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

    துணை ஜனாதிபதி தேர்தலில் டெல்லி பாராளுமன்ற மக்களவை மற்றும் மேல்சபை ஆகிய இரு சபைகளின் எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள். இரு சபைகளின் நியமன எம்.பி.க்களும் வாக்களிக்க முடியும்.

    543 எம்.பி.க்களை கொண்ட பாராளுமன்றத்தில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல 245 உறுப்பினர்களை கொண்ட மேல்சபையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் இரு அவைகளையும் சேர்த்து எம்.பி.க்களின் பலம் 782 ஆக உள்ளது.

    இதில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் நபர் வெற்றி பெற தகுதி உள்ள அனைத்து எம்.பி.க்களும் வாக்களிக்கும் நிலையில் குறைந்த பட்சம் 392 வாக்குகளைப் பெற வேண்டும். பாராளுமன்ற மக்களவையில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 542 எம்.பி.க்களில் 293 பேர் உள்ளனர்.

    பாராளுமன்ற மேல்சபையில் தற்போது உள்ள 240 எம்.பி.க்களில் 134 பேரின் ஆதரவு பா.ஜ.க. கூட்டணிக்கு உள்ளது. நியமன எம்.பி.க்களின் ஆதரவும் பா.ஜ.க. கூட்டணிக்கு கிடைக்கும்.

    இதனால் மொத்தம் 427 எம்.பி.க்களின் ஆதரவு பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளருக்கு கிடைக்கும். எனவே பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் துணை ஜனாதிபதி வேட்பாளர் மிக மிக எளிதாக வெற்றி பெறுவார்.

    பாராளுமன்ற இரு சபைகளிலும் இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 355 எம்.பி.க்கள் தான் உள்ளனர். மக்களவையில் 249 எம்.பி.க்களும், மாநிலங்கள் அவையான மேல் சபையில் 106 எம்.பி.க்களும் உள்ளனர். எனவே எதிர்க்கட்சிகள் நிறுத்தும் துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.

    அதே சமயத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கும், துணை ஜனாதிபதி தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் வாக்குகளுக்கு அவர்களது மாநில எல்லை மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப மதிப்பு மாறுபடும். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு எம்.பி.க்களின் வாக்குகள் மட்டுமே அப்படியே கருத்தில் கொள்ளப்படும்.

    பொதுவாக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் வாக்களிக்கும்போது அந்தந்த கட்சியின் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது சட்ட விதியாகும். ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் எம்.பி.க்களுக்கு இது பொருந்தாது. எம்.பி.க்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு மனுதாக்கல் செய்பவரை 20 எம்.பி.க்கள் முன்மொழிய வேண்டும். 20 எம்.பி.க்கள் வழிமொழிய வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய பா.ஜ.க. கூட்டணி, இந்தியா கூட்டணி இருவருக்கும் இடையே நேரடி பலப்பரீட்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    துணை ஜனாதிபதி தேர்தலை 3 பாராளுமன்ற மூத்த அதிகாரிகளை கொண்ட குழு நடத்தும் என்று தெரிய வந்துள்ளது. ஓட்டுப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படும்.

    ஒவ்வொரு எம்.பி.யும் வாக்களிப்பதற்கு அரசு சார்பில் பேனா வழங்கப்படும். அந்த பேனாவை பயன்படுத்திதான் எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும். சொந்த பேனாவை பயன்படுத்தி 'டிக்' செய்தால் அந்த வாக்கு செல்லாததாக அறிவிக்கப்படும்.

    ஓட்டுப்பதிவுக்கு மறுநாள் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் முடிவுகள் சில மணி நேரங்களில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    துணை ஜனாதிபதி பதவி காலியாக இருப்பதை நீண்ட நாட்களுக்கு அனுமதிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக தேர்தல் அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×