search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர் திறப்பு
    X

    மல்டிபிளக்ஸ் திரையரங்கை துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா திறந்துவைத்த காட்சி.

    காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர் திறப்பு

    • தியேட்டரை துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா திறந்து வைத்தார்.
    • மல்டிபிளக்சின் 3 தியேட்டர்களில் மொத்தம் 520 இருக்கைகள் உள்ளன.

    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் 13 தியேட்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில், பயங்கரவாதம் அவற்றுக்கு மூடுவிழா நடத்தியது. காஷ்மீரில் சினிமாவை திரையிடக்கூடாது என்று 1989-ம் ஆண்டு ஒரு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்ததால் தியேட்டர்கள் இழுத்து பூட்டப்பட்டன.

    கடந்த 1999-ம் ஆண்டு காஷ்மீர் அரசின் ஆதரவுடன் ஸ்ரீநகரில் மீண்டும் 3 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் சினிமா பார்க்க தியேட்டர் சென்ற ஒரு ரசிகர், பயங்கரவாதிகளின் கையெறி குண்டுவீச்சில் கொல்லப்பட்டதால் உடனடியாக மீண்டும் அவற்றுக்கு பூட்டு போடப்பட்டது.

    இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீநகரின் சோனாவார் பகுதியில் முதல் தியேட்டரை துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா நேற்று திறந்துவைத்தார். இந்த மல்டிபிளக்சின் 3 தியேட்டர்களில் மொத்தம் 520 இருக்கைகள் உள்ளன. இந்த மல்டிபிளக்ஸ் வளாகத்தை தார் குடும்பத்தினர், ஐநாக்ஸ் குழுமத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளனர். மல்டிபிளக்ஸ் திறப்புவிழாவின்போது பேசிய துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா, இதன் மூலம் காஷ்மீரின் சாதாரண மக்களுக்கும் பொழுதுபோக்கு வசதி கிடைக்கிறது. காஷ்மீரின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 100 இருக்கைகள் கொண்ட தியேட்டர்கள் திறக்கப்படும். காஷ்மீரில் திரைப்பட நகரம் ஒன்றும் அமைக்கப்படும் என்றார்.

    புதிய மல்டிபிளக்சில் முதல் நாளில் சிறப்பு காட்சியாக அமீர்கான், கரீனா கபூர் கான் நடித்த 'லால் சிங் சத்தா' படம் திரையிடப்பட்டது.

    Next Story
    ×