என் மலர்
உலகம்

ஷேக் ஹசீனா கட்சியை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தியாவுக்கு ஓட்டம்: வங்கதேச இடைக்கால அரசு ஆலோசகர்
- 2013 முதல் 2014 வரை மக்கள் தங்களுடைய வாக்குரிமைக்காக போராடியபோது அதிக அளவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
- அவாமி லீக் அரசியலுக்கு எதிர்ப்பு தெரித்தவர்கள் பயங்கரவாதிகள், போராளிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு ஓடிவிட்டனர் என வங்கதேச இடைக்கால அரசின் தகவல் ஆலோசகர் மஹ்ஃபுஜ் ஆலம் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் காணாமல் போனர்வர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற ரம்ஜான் பண்டிகை விழா டாக்காவில் நடைபெற்றது. மனித உரிமை குழுவான மேயர் டக் (Mayer Dak) ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மஹ்ஃபுஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக மஹ்ஃபுஜ் ஆலம் கூறியதாவது:-
ஷேக் ஹசீனாவின் பெற்றோர்கள் படுகொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல் அல்லது கொலை செய்தலை ஷேக் ஹசீனா பயன்படுத்தியுள்ளார்.
2013 முதல் 2014 வரை மக்கள் தங்களுடைய வாக்குரிமைக்காக போராடியபோது அதிக அளவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய நோக்கம் தேர்தல் முறையை அழிப்பதாகும்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. கமிஷனின் அறிக்கைப்படி, தனிப்பட்ட பல்வேறு நபர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது.
அவாமி லீக் அரசியலுக்கு எதிர்ப்பு தெரித்தவர்கள் பயங்கரவாதிகள், போராளிகள் என முத்திரை குத்தப்பட்டு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தங்கி நாட்டிற்கு எதிராக ஹசீனா இன்னும் சதித்திட்டங்களை தீட்டி வருகிறார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மாஃபியா குழு போன்று அவாமி லீக் செயல்பட்டு வருகிறது. ஒருபோதும் மீண்டும் வங்கதேச அரசியலக்கு திரும்ப அனுமதிக்கப்படமாட்டாது.
ஷேக் ஹசீனாவுக்கும், அவருடைய பயங்கரவாத படைகளுக்கும் அடைக்கலம் கொடுக்க இந்தியா தேர்வு செய்தது துரதிருஷ்டவசமானது. கிட்டத்தட்ட 1,00,000 அவாமி லீக் உறுப்பினர்கள் அங்கு தஞ்சம் புகுந்துள்ளதாக நாங்கள் அறிந்திருக்கிறோம்.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்ததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் 16 ஆண்டு கால அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. உடனடியாக வங்கதேசத்தில் இருந்து ரகசியமாக வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இவ்வாறு மஹ்ஃபுஜ் ஆலம் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து படுகொலை, ஊழல் தொடர்பாக 100-க்கும் அதிகமான வழக்குகள் அவருக்கு எதிராக போடப்பட்டுள்ளது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் அல்லது படுகொலைகள் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவரது கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது விசாரணையைத் தவிர்க்க வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.






