என் மலர்
இந்தியா

ஈரானில் உள்ள இந்திய மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றம் - வெளியுறவுத்துறை அமைச்சகம்
- பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
- இந்தியர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்- ஈரான் இடையே தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருநாடுகளும் தாக்குதலை நிறுத்துமாறு உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தொடர் தாக்குதல் நடைபெற்று வருவதால் அந்நாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். மேலும் இஸ்ரேல், ஈரான் நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூதரகம் செய்த ஏற்பாடுகள் மூலம் பாதுகாப்பு காரணங்களுக்காக தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே போக்குவரத்து வசதியில் தன்னிறைவு பெற்ற மற்றவர்களும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நகரத்தை விட்டு வெளியே அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியர்கள் சிலர் தனித்தனியாக ஆர்மீனியாவின் எல்லை வழியாக ஈரானை விட்டு வெளியேற வசதி செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் நோக்கில் தூதரகம் மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






