என் மலர்
இந்தியா

பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி
- கடந்த சில நாட்களாக பெங்களூரு பகுதியில் அடிக்கடி கடைகளில் பால், தயிர் பாக்கெட்டுகள் திருட்டு அதிகரித்து காணப்படுகிறது.
- இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த சிலர் லிட்டர் கணக்கில் பால், தயிர் பாக்கெட்டுகளை திருடினர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் பால் மற்றும் தயிர் விலையை அரசு உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் விலை உயர்வை அரசு திரும்ப பெறவில்லை.
இந்த நிலையில் பால், தயிர் விலை அதிகரித்த நிலையில் கடந்த சில நாட்களாக பெங்களூரு பகுதியில் அடிக்கடி கடைகளில் பால், தயிர் பாக்கெட்டுகள் திருட்டு அதிகரித்து காணப்படுகிறது.
பெங்களூரு காமாஷிபல்யா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கடையில் ஒரு மர்ம நபர் 1 லிட்டர் பால் பாக்கெட்டை திருடியுள்ளார். இந்த காட்சிகள் அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதே போல் காமாஷிபாளையம் என்ற பகுதியில் பால் பூத்துக்கு முன்பு பெட்டிகளில் பால் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த சிலர் லிட்டர் கணக்கில் பால், தயிர் பாக்கெட்டுகளை திருடினர். இந்த காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதே போல் பல்வேறு இடங்களிலும் பால், தயிர் பாக்கெட் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






