search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஸ்ரீநகரில் நடைபெறும் ஜி20 செயற்குழு கூட்டத்தில் கடற்படை கமாண்டோக்கள், ராணுவத்தை ஈடுபடுத்த முடிவு
    X

    ஸ்ரீநகரில் நடைபெறும் ஜி20 செயற்குழு கூட்டத்தில் கடற்படை கமாண்டோக்கள், ராணுவத்தை ஈடுபடுத்த முடிவு

    • ஸ்ரீநகரில் இன்று பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து யோசனை வகுக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜி20 அமைப்பின் செயற்குழு கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

    ஆனால், சமீபத்தில் பூஞ்ச் பகுதியில் ராணுவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு, 5 துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்யலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், காஷ்மீரில் ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு சீனாவும் பாகிஸ்தானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதற்காக ஸ்ரீநகரில் இன்று பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் விஜய் குமார் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் ராணுவம், பிஎஸ்எஃப், சிஆர்பிஎஃப், என்எஸ்ஜி மற்றும் பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், ஃபிதாயீன் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட ஏதேனும் சாத்தியமான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் யோசனை வகுக்கப்பட்டுள்ளது.

    இதனால், ஜி20 செயற்குழு கூட்டத்தில் பாதுகாப்பிற்காக மரைன் கமாண்டோக்கள், தேசிய பாதுகாப்புப் படையினர் (என்எஸ்ஜி) மற்றும் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×