என் மலர்
இந்தியா

மம்தா பானர்ஜி கட்டாயம் பதவி விலகவேண்டும்: நிர்பயா தாயார்
- மம்தா பானர்ஜி பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்.
- இந்தச் சூழ்நிலையை சரியாகக் கையாள தவறியதால் மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும் என்றார்.
புதுடெல்லி:
மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்து வந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கல்லூரி கருத்தரங்கு அறையில் கடந்த 9-ம் தேதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைதுசெய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதால், தற்போது சி.பி.ஐ. இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறது.
இந்தச் சம்பவத்தை கண்டித்தும், டாக்டர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக் கோரியும் மாநிலம் முழுவதும் பயிற்சி டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 14-ம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்குள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் டாக்டர் கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரி மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பேரணி நடத்தினார்.
இந்நிலையில், நிலைமையை சரியாக கையாள தவறியதால் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆஷா தேவி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
மம்தா பானர்ஜி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்.
இந்தப் பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப மம்தா பானர்ஜி போராட்டம் நடத்துகிறார்.
மாநில முதல் மந்திரி என்ற பொறுப்பை பயன்படுத்தி குற்றவாளிகள்மீது அவர் கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையை சரியாகக் கையாள தவறியதால் மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும்.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் ஒரு பெண்ணுக்கு எதிராக இதுபோன்ற காட்டுமிராண்டித்தனம் நடந்துள்ளது எனில், நாட்டின் பிற பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.






