என் மலர்
இந்தியா

காதல் ஜோடியை இணைத்து வைத்த குறும்படம்: வாலிப பருவ காதலியை 65 வயதில் கரம் பிடித்த முதியவர்
- தனது காதல் தோற்றுப் போய்விட்டதாக கருதிய ஜெயபிரகாஷ், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
- வெவ்வேறு நபர்களுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன.
காதல்...
அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்றால் அது "காதல்" தான். அதிலும் மனிதனின் காதல் தனித்துவமிக்கது. அது தரக்கூடிய உணர்வு மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். அப்படிப்பட்ட காதலில் விழுந்து, வாழ்க்கையில் இணைந்தவர்களும் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்தவர்களும் உண்டு.
அதே நேரத்தில் தனது மனம் விரும்பிய ஒருவரை கரம்பிடிக்க ஆண்டுக்கணக்கில் காத்திருந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு திருமண பந்தத்தில் இணைந்த ஜோடிகளும் உண்டு. அப்படித்தான் வாலிப பருவத்தில் காதலித்த இருவர், தற்போது 60 வயதுக்கு பிறகு திருமணம் செய்துள்ளனர்.
கேரளாவில் அரங்கேறியிருக்கும் அந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் தனது வாலிப பருவத்தில் ரஷ்மி என்ற பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அதனை அவரிடம் கூற பயந்திருக்கிறார். பின்பு வெகுநாட்களுக்கு பிறகு தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், ரஷ்மிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். தனது காதல் தோற்றுப் போய்விட்டதாக கருதிய ஜெயபிரகாஷ், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இறுதியில் அவரும் திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு நபர்களுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் தங்களது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரின் துணைகளும் அடுத்தடுத்து இறந்தனர்.
ரஷ்மியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பும், ஜெயபிரகாசின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பும் திடீரென இறந்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் தங்களின் குழந்தைகளே வாழ்க்கை என நினைத்து, வேறு திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தனர்.
கணவரை இழந்த வேதனையிலிருந்து மீள்வதற்காக ரஷ்மி, கலாச்சார நிகழ்வுகளில் ஈடுபட்டார். மேலும் குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். ஜெயபிரகாஷ் தனது குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் மறுமணம் செய்ய திட்டமிட்டார். அதற்காக பெண் தேடும் படலத்திலும் ஈடுபட்டார்.
இந்தநிலையில் ரஷ்மி நடித்த ஒரு குறும்படத்தை ஜெயபிரகாஷ் பார்த்தார். தனது வாலிப பருவ காதலி குறும்படங்களில் நடிப்பதை அறிந்து அவர் உள்ளத்தில் மகிழ்ந்தார். அவரை தொடர்பு கொண்டு பேச துடித்தார். இறுதியில் குறும்பட இயக்குனரிடமிருந்து ரஷ்மியின் மகள் செல்போன் எண்ணை வாங்கினார்.
அதில் தொடர்பு கொண்டு ரஷ்மியிடம் பேசினார். இதையடுத்து அவர்களுக்கு இடையே பழைய உறவு மீண்டும் துளிர்விட்டது. அதே நேரத்தில் இருவரின் துணைகளும் இறந்த விவரத்தை இருவரும் அறிந்துகொண்டனர். தற்போது மறுமணத்துக்கு பெண் தேடி வரும் விவரத்தை ரஷ்மியிடம் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.
அப்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார். அதுபற்றி ரஷ்மி தனது மகள் மற்றும் மருமகனிடம் கூறினார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனர்.
இதையடுத்து ரஷ்மி திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாக ஜெயபிரகாஷிடம் தெரிவித்தார். உடனே அவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. 60 வயதுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இருவரின் திருமணம் கொச்சியில் மிகவும் எளிமையான முறையில் நடந்தது.
அதில் ஜெயபிரகாஷ்-ரஷ்மி ஆகிய இருவரின் குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இருவரின் திருமணத்தை அவர்களது குழந்தைகள் முன்னின்று நடத்தி வைத்தனர். "உண்மையான காதல் நிச்சயம் ஒரு நாள் ஜெயிக்கும்" என்பதற்கு சாட்சியாக வாலிப வயதில் காதலித்த ஜோடி, தங்களின் 60 வயதிற்கு பிறகு ஒன்றிணைந்துள்ளனர்.
ஜெயபிரகாஷ்-ரஷ்மி ஆகிய இருவரின் திருமண புகைப்படத்தை ரஷ்மியின் மகள் சமூக வலைதளங்களில், "எந்த குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும்" என்ற நெகிழ்ச்சியான வாசகத்துடன் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






