என் மலர்
இந்தியா

கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் அதிரடி சோதனை
- வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அவ்வப்போது லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
- லோக் ஆயுக்தா சோதனையால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அவ்வப்போது லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை கைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
தும்கூரில் உள்ள கட்டுமான மையத்தின் திட்ட இயக்குனர் ராஜசேகர், தெற்கு மாவட்டத்தின் கணக்கெடுப்பு மேற்பார்வையாளர் மஞ்சுநாத், விஜயபுரத்தை சேர்ந்த டாக்டர் பி.ஆர்., அம்பேத்கர் மேம்பாட்டுக்கழக மாவட்ட மேலாளர் ரேணுகா, பெங்களூரு நகர நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் இயக்குநரக கூடுதல் இயக்குனர் முரளி, சட்ட அளவியல் ஆய்வாளர் எச்.ஆர். பெங்களூரு கிராமப்புறத்தில் உள்ள ஹோஸ்கோட் தாலுகா அலுவலகத்தை சேர்ந்த நடராஜ், எஸ்.டி.ஏ., அனந்தகுமார் மற்றும் யாத்கீரில் உள்ள ஷாஹாபூர் தாலுகாவை சேர்ந்த உமகந்தா ஆகியோருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் இடங்களில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது.
பெங்களூரு நகரில் 12 இடங்களிலும், தும்கூரில் 7 இடங்களிலும், பெங்களூரு கிராமப்புறத்தில் 8 இடங்களிலும், யாத்கீரில் 5 இடங்களிலும், மங்களூரில் 4 இடங்களிலும், விஜயபுராவில் 4 இடங்களில் என மொத்தம் 40 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து தெரியவரும்.
இந்த சோதனையால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.






