என் மலர்
இந்தியா

GST மட்டும் ரூ.63 கோடி - ரூ.703 கோடிக்கு வீடு வாங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்திய பெண் தொழில் அதிபர்
- சாதாரணமாக நகரங்களில் வீடு வாங்குவது என்பது சில லட்சங்களில் முடிந்துவிடும்.
- சென்னை போன்ற பெரு நகரங்களில் கோடிகளை தொட்டுவிடும்.
சொந்த வீடு என்பது நம் ஒவ்வொருவரின் கனவு. மாதச் சம்பளம் பெறும் நடுத்தர மக்கள் பலர், வங்கிக்கடன் மூலம் தங்களது சொந்த வீடு என்னும் லட்சியத்தை நிறைவேற்றுகிறார்கள்.
ஆனால் அதற்கான மாதத்தவணையை கட்டி முடிப்பதற்குள், போதும் போதும் என்றாகிவிடும். இருந்தாலும், மற்றச் செலவினங்களை குறைத்து பலர் தங்களது கனவு இல்லத்தை சொந்தமாக்குகிறார்கள்.
சாதாரணமாக நகரங்களில் வீடு வாங்குவது என்பது சில லட்சங்களில் முடிந்துவிடும். சென்னை போன்ற பெரு நகரங்களில் கோடிகளை தொட்டுவிடும். பெரு நகரங்களின் முக்கிய பகுதிகளில் வீடு வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்குத்தான் சிரமம். கோடீஸ்வரர்களுக்கு இல்லை.
ஆனால் கோடீஸ்வரர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு பெண், பல கோடிகளை கொட்டி 2 வீடுகளை வாங்கியுள்ளார். அதன் மதிப்பை கேட்டால் தலை சுற்றிவிடும். அதுவும் அவர் இந்தியாவின் பொருளாதார நகரமான மும்பையில் அந்த வீடுகளை வாங்கியுள்ளார்.
அவரது பெயர் லீனா காந்தி திவாரி. பிரபல பன்னாட்டு மருந்து கம்பெனியை நடத்தி வருகிறார். மும்பையில் மிகவும் மதிப்பு மிக்க வொர்லியில் நமன் சனாவில் 40 அடுக்கு மாடிகளை கொண்ட குடியிருப்பில் 2 வீடுகளை அவர் வாங்கியுள்ளார். அதன் விலை ரூ.639 கோடி. இதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரபிக்கடலை பார்க்கும் வகையில் அமைந்துள்ள அந்த பிளாட்டுகள் 22,572 சதுர அடி கொண்டது. சதுர அடிக்கு ரூ.2.83 லட்சம் விலையாக கொடுத்து அந்த வீடுகளை அவர் வாங்கியுள்ளார். இதற்காக அவர் ஜி.எஸ்.டி.யாக மட்டும் ரூ.63.9 கோடி செலுத்தியுள்ளார் என்பது பத்திரப்பதிவு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அவர் வாங்கிய 2 வீடுகளின் மொத்த மதிப்பு ரூ.703 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
கோடிகளை கொட்டி வீடு வாங்கிய பெண் தொழில் அதிபர் லீனா காந்தி திவாரி, பிரபல இந்திப்பட நடிகை ஜூகிசாவ்லாவின் நெருங்கிய தோழியாவார்.
மும்பை வொர்லி நமன் சனாவில் இதுபோன்று கோடிகளில் வீடு வாங்குவது ஒன்றும் புதிது அல்ல. சமீபத்தில் கோடாக் மஹிந்த்ரா வங்கியின் நிறுவனர் உதய் கோடாக், 22 அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.400 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






