என் மலர்
இந்தியா

கண் சிவந்த லாலு பிரசாத்.. கட்சியிலும் குடும்பத்திலும் இருந்து மூத்த மகனை நீக்கினார் - பரபரப்பு காரணம்
- சமூக நீதிக்கான நமது கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது.
- பொறுப்பற்ற அணுகுமுறை ஆகியவை எங்கள் குடும்ப விழுமியங்களுடன் ஒத்துப்போகவில்லை.
பீகாரின் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகள், பொறுப்பற்ற நடத்தை மற்றும் குடும்ப விழுமியங்களுக்கு எதிராகச் செயல்பட்டதற்காக தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார்.
இதுதொடர்பாக லாலு பிரசாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தனிப்பட்ட வாழ்க்கையில் தார்மீக விழுமியங்களைப் புறக்கணிப்பது சமூக நீதிக்கான நமது கூட்டுப் போராட்டத்தை பலவீனப்படுத்துகிறது.
மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை மற்றும் பொறுப்பற்ற அணுகுமுறை ஆகியவை எங்கள் குடும்ப விழுமியங்களுடன் ஒத்துப்போகவில்லை.
எனவே, அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்குகிறேன். இனிமேல், அவருக்கு கட்சியிலோ அல்லது குடும்பத்திலோ எந்தப் பங்கும் இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.
தேஜ் பிரதாப் யாதவ், அனுஷ்கா யாதவ் என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகும் புகைப்படங்களும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு புகைப்படத்தில், அனுஷ்கா தேஜ் பிரதாப்புக்காக கர்வா சௌத் சடங்கு செய்வதைக் காண முடிந்தது.
இருவரும் கடந்த 12 வருடங்களாக டேட்டிங் செய்து வருவதாகவும், சமீபத்தில் தங்கள் உறவை பகிரங்கப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரச்சனை என்னவென்றால் 37 வயதான தேஜ் பிரதாப் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஐஸ்வர்யா ராய் என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில்தான் தேஜ் பிரதாப் இந்த விஷயத்தில் எடுத்த நடவடிக்கையால் லாலு பிரசாத் யாதவ் அதிர்ச்சியடைந்ததாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






