என் மலர்
இந்தியா

குற்றவாளிகளை போலீசார் துப்பாக்கியால் சுட தயங்க வேண்டாம்- கேரளாவில் அதிரடி உத்தரவு
- குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது போலீசார் துப்பாக்கியை எடுத்துச் செல்லவேண்டும்.
- காவல்துறையினரை தாக்குபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி ஒருவரின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி உள்ள னர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியுள்ளனர். அப்போது மோதலில் ஈடுபட்டவர்கள் பயங்கர ஆயுதங்களால் போலீசாரை தாக்கியிருக்கின்றனர். போலீஸ் வாகனங்களையும் அடித்து உடைத்தனர்.
இந்த சம்பவத்தில் சில போலீசார் காயமடைந்தனர். இந்தநிலையில் கேரள மாநில ஏ.டி.ஜி.பி. வெங்கடேஷ் போலீசாருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
போலீசார் மக்களை காப்பாற்றவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் துப்பாக்கியை பயன்படுத்தலாம். வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது போலீசார் துப்பாக்கியை எடுத்துச் செல்லவேண்டும். அப்போது அவர்கள் போலீசாரை தாக்க முயன்றாலோ, தாக்குவதற்கு தயாராக இருந்தாலோ தற்காப்புக்காக அவர்களை துப்பாக்கியால் சுடுவதற்கு போலீசார் தயங்கக்கூடாது. காவல்துறையினரை தாக்குபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஏ.டி.ஜி.பி. உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் குண்டர் வழக்குகளில் தொடர்புடையவர்களின் மீது எடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் ஏ.டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.






