என் மலர்
இந்தியா

வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் தொடங்கியது
- கல்வி, பாரம்பரியமான பட்டு வகைகள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.
- தொடர்ந்து 10 நாட்கள் நிகழ்ச்சி நடக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டது. 3-வது ஆண்டாக இந்த ஆண்டு இன்று மாலையில் தொடங்கியது.
தொடக்க விழாவில் உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி மந்திரிகள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து 10 நாட்கள் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் 80 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கல்வி, கலாச்சாரம், மொழியின் பெருமை, கைத்தொழில்கள், பாரம்பரியமான பட்டு வகைகள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன. விற்பனை, கண்காட்சி, செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படும்.
இந்த ஆண்டு தமிழ் முனிவரான அகத்தியரை முன்னிலைப்படுத்துகிறார்கள். இதற்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் அகத்தியரின் சிலை இடம் பெற்றுள்ளது. மேலும் அவரை பற்றிய புத்தகங்கள், ஓலை சுவடிகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தின் பெருமைக்குரிய பெரியவர்கள் பலரை பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டு உள்ள அரங்கில் திருவள்ளுவர், அவ்வையார், காரைக்கால் அம்மையார், தில்லையாடி வள்ளியம்மை, முத்து லெட்சுமி ரெட்டி, வீரமங்கை வேலுநாச்சியார், எம்.எஸ்.சுவாமிநாதன், சி.வி.ராமன், டாக்டர் அப்துல்கலாம், ஜி.டி.நாயுடு உள்பட பலரது புகைப்படங்கள் அவர்களது சிறப்புகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலக பிரபலங்கள் வரிசையில் நடிகர் அஜித்குமார், இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரகு மான், விஜய் சேதுபதி, மறைந்த சிவாஜி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
வாரணாசியில் முகாமிட்டுள்ள மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.சந்திரசேகரன் கூறியதாவது:-
தமிழ் மொழியின் பெருமை, இலக்கியங்களின் வளமை ஆகியவற்றை நாடு முழுவதும் எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த ஆண்டு திருக்குறளும், தொல்காப்பியமும் இந்தியில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு 41 சங்க இலக்கிய நூல்களை இந்தியில் மொழி பெயர்த்து இன்று வெளியிடுகிறோம்.
முக்கியமாக யூடியூப் சானல் மூலம் இந்தி வழியாக தமிழை கற்றுக் கொள்ளும் பயிற்சி வகுப்பும் இன்று தொடங்கப்பட்டது. ரூ.300 கட்டணம் செலுத்த இந்தி பயிற்சி வகுப்பில் சேரலாம். 90 நாட்கள் வகுப்பு நடக்கும். இதில் சேருபவர்களுக்கு இந்தி மூலம் 30 நாளில் தமிழில் பேச, எழுத, படிக்க முடியும் என்ற 2 தொகுதி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
இதன் மூலம் இந்தி பேசும் வட மாநில மக்கள் இனிமையான தமிழ் மொழியை எளிதில் கற்றுக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






