என் மலர்tooltip icon

    இந்தியா

    நாளை மறுநாள் முதல் கர்நாடகாவில் பைக் டாக்ஸி இயக்க தடை
    X

    நாளை மறுநாள் முதல் கர்நாடகாவில் பைக் டாக்ஸி இயக்க தடை

    • 15-ந்தேதிக்கு பிறகு பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை என்று ஐகோர்ட் ஏற்கனவே கூறிவிட்டது.
    • இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இதையடுத்து பைக் டாக்ஸி நிறுவனங்கள் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பைக் டாக்ஸிக்கு அரசு விதித்த தடை செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டது. மேலும் 15-ந் தேதிக்கு பிறகு பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை என்று ஐகோர்ட் ஏற்கனவே கூறிவிட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர்ராவ்-நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண்ஷெட்டி, 'கர்நாடகத்தில் 4, 3 சக்கர வாகனங்கள் உரிய அனுமதி பெற்று வாடகை அடிப்படையில் டாக்ஸி சேவையை வழங்குகின்றன. ஆனால் இரண்டு சக்கர வாகனங்களை வாடகை வாகனங்களாக மாற்றுவது என்பது சாத்தியமில்லை. இத்தகைய பைக் டாக்ஸிக்கு நாட்டில் 8 மாநிலங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

    மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், 'நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் மட்டும் அதற்கு விதிமுறைகளை அரசு வகுக்கவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள், பெரிய வாகனங்களை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடும் குறைவாக இருக்கும். அதனால் இரண்டு சக்கர வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தால் போதும். பதிவெண் பலகைகளின் நிறத்தை பசுமை நிறத்திற்கு மாற்றினால் போதுமானது' என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்துறையின் உத்தரவுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. எனவே நாளை மறுநாள் 16-ந்தேதி முதல் கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்பட உள்ளது.

    Next Story
    ×