search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றி - இஸ்ரோ தலைவர் பெருமிதம்
    X

    ககன்யான் சோதனை ஓட்டம் வெற்றி - இஸ்ரோ தலைவர் பெருமிதம்

    • மோசமான வானிலையால் சோதனை ஓட்டம் தாமதமானது.
    • சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    ஸ்ரீஹரிகோட்டா:

    அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி பல்வேறு விதமான ஆய்வுகளை செய்து வருகின்றன.

    விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்தியா இதுவரை மனிதர்களை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பவில்லை. எனவே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கனவு திட்டமாக வைத்திருந்தனர்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த ககன்யான் என்ற விண்கலம் உருவாக்கப்படுகிறது. இந்த விண்கலம் மனிதர்களை தரையில் இருந்து விண்ணில் 400 கிலோமீட்டர் தொலைவுக்கு அழைத்துச் செல்லும். அங்கு புவி தாழ்வட்ட பாதையில் விண்வெளி வீரர்கள் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இந்த கனவு திட்டத்தை இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2025-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக, 3 கட்டங்களாக ககன்யான் விண்கலம் போன்று மாதிரி விண்கலத்தை வைத்து சோதனை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

    அதன்படி முதல் கட்ட சோதனை இன்று நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ககன்யான் விண்கலம் போன்று மாதிரி விண்கலம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மாதிரி விண்கலத்தை சுமந்து செல்ல டிவி-டி1 என்ற சிறிய ரக ராக்கெட் தயாரிக்கப்பட்டது.

    இந்த ராக்கெட்டில் மாதிரி விண்கலத்தை இணைத்து விண்ணில் ஏவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாதிரி விண்கலத்தில் வீரர்கள் இருக்கும் பகுதி நவீன பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.

    ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்காக "க்ரூ எஸ்கேப் சிஸ்டம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் உள்ள பாராசூட்டுகள் மூலம் பூமியிலோ அல்லது கடலிலோ விண்வெளி வீரர்கள் தரை இறங்கி தப்ப முடியும்.

    இதை முதல் கட்ட பரிசோதனையாக பரிசோதித்து பார்க்க இஸ்ரோ திட்டமிட்டது. 3 விண்வெளி வீரர் கள் ககன்யான் விண்கலத்தில் அனுப்பப்பட இருப்பதால் 3 பாராசூட்டுகள் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிவதை சோதித்து பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்தில் இருந்து ககன்யான் மாதிரி விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளையும் கடந்த ஒரு வாரமாக இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்து வந்தனர். இதற்கான கவுண்ட் டவுன் நேற்று இரவு தொடங்கியது.

    விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அழைத்து வரும் திட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் முதலாக நடத்துவதால் இந்த சோதனை திட்டம் அனைத்துத் தரப்பினராலும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்டது.

    இன்று காலை 8 மணிக்கு ககன்யான் மாதிரி விண்கலம் விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக மோசமான வானிலை நிலவியதால் மாதிரி விண்கலத்தை விண்ணில் செலுத்துவதை இஸ்ரோ விஞ்ஞானிகள் 30 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தனர். 8.30 மணிக்கு மாதிரி விண்கலம் பறக்கும் என்று தெரிவித்தனர்.

    8.30 மணிக்கு மீண்டும் மாதிரி விண்கலத்தை விண்ணில் ஏவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தொடர்ந்து வானிலையில் சாதகமான நிலை காணப்படவில்லை. எனவே 2-வது முறையாக மாதிரி விண்கலம் விண் ணில் ஏவப்படுவது ஒத்தி வைக்கப்பட்டது. 8.45 மணிக்கு மீண்டும் ககன்யான் மாதிரி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

    8.45 மணிக்கு வானிலை சீராகி சாதகமான நிலை இருந்தது. எனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு மூச்சுடன் மாதிரி விண்கலத்தை விண்ணில் ஏவும் பணிகளில் ஈடுபட்ட னர். ஆனால் துரதிருஷ்டவசமாக ராக்கெட் எரிபொருள் எரியூட்டப்படுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. எரிபொருள் திட்டமிட்டபடி தீப்பற்றினால் தான் ராக்கெட் குறிப்பிட்ட வேகத்தில் விண்ணுக்குச் செல்ல முடியும்.

    ஆனால் அதில் எப்படியோ தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடைசி 5 வினாடிகள் மீதம் இருந்த நிலையில் மாதிரி விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்துவதை நிறுத்தினார்கள். இதன் காரணமாக 3-வது முறையாக மாதிரி விண்கலம் விண்ணுக்கு செலுத்துவது தடைபட்டது.

    இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், "மாதிரி விண்கலத்தை செலுத்துவதற்கான எரிபொருள் எரியூட்டுவதில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ராக்கெட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. எரியூட்டுவதில் ஏற்பட்டுள்ள திடீர் இடையூறை ஆய்வு செய்து வருகிறோம். அடுத்து எப்போது ஏவப்படும் என்பதை விரைவில் தெரிவிக்கிறோம்" என்றார். அதன்படி 10 மணிக்கு மீண்டும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    3 முறை மாதிரி விண்கலம் ஏவுவதில் தடைபட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பரபரப்புடன் காணப்பட்டனர். ககன்யான் மாதிரி விண்கலம் ஏவுவதை நேரில் பார்க்க வந்தவர்களும் கவலையான முகத்துடன் இருந்தனர்.

    இந்நிலையில், 10 மணிக்கு மீண்டும் ககன்யான் மாதிரி விண்கலத்தை விண்ணுக்கு ஏவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த தடவை அனைத்து ஏற்பாடுகளும் துல்லியமாக இருந்ததால் ராக்கெட் திட்டமிட்ட பாதையில் வெற்றிகரமாக பறந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார்கள்.

    ககன்யான் மாதிரி விண்கலத்தை விண்ணில் சுமார் 16.6 கிலோமீட்டர் தூரத்துக்கு கொண்டு சென்று, அதன்பிறகு அதில் இருந்து மாதிரி விண்கலத்தைப் பிரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. அதன்படி 17 கிலோ மீட்டர் உயரத்தில் ராக்கெட்டில் இருந்து மாதிரி விண்கலம் வெற்றிகரமாக தனியாக பிரிந்தது.

    அதன்பிறகு மாதிரி விண்கலத்தில் இருந்து 3 பாராசூட்டுகளில் வீரர்கள் தரைஇறங்குவது போன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பாராசூட்டுகள் ஒரு வினாடிக்கு 8 மீட்டர் தூரம் என்ற வேகத்தில் தரை இறங்கியது. இந்தப் பணிகள் அனைத்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி சரியாக நடந்தன.

    குறிப்பிட்ட நேரத்தில் பாராசூட்டுகளுடன் மாதிரி விண்கலம் வங்கக்கடலில் இறங்கியது. அந்த விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி மீட்டனர்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்குள் பாராசூட்டுக்கள் மூலம் அந்த மாதிரி விண்கலம் வங்கக்கடலில் மிதந்து கொண்டு இருந்தது. இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் அதை மீட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் ஒப்படைத்தனர்.

    இதன்மூலம் விண்ணுக்கு மனிதர்களை பாதுகாப்புடன் அனுப்பும் திட்டத்தின் முதல் கட்ட சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.

    Next Story
    ×