search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மறுபிறவி எடுப்பேன்... அருந்ததி பட பாணியில் தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சோகம்
    X

    அருந்ததி பட காட்சி

    மறுபிறவி எடுப்பேன்... அருந்ததி பட பாணியில் தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சோகம்

    • அருந்ததி படத்தில் கதாநாயகி எதிரியை பழிவாங்க மறுபிறவி எடுப்பதுபோன்று காட்சி இடம்பெற்றிருக்கும்.
    • அருந்ததி படத்தை குறைந்தது 15-20 முறையாவது ரேணுகாபிரசாத் பார்த்திருக்கலாம் என அவரது உறவினர் தெரிவித்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் 'அருந்ததி' பட பாணியில் மறுபிறவி எடுப்பதாக கூறி தீக்குளித்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகா, கொண்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகாபிரசாத் (வயது 23). திரைப்படங்களுக்கு அடிமையான இவர் பியுசி முதல் ஆண்டு முடிந்ததும் படிப்பை நிறுத்தி உள்ளார். அவருக்கு பிடித்த திகில் படங்களை அதிக அளவில் பார்த்துள்ளார். குறிப்பாக, கடந்த சில தினங்களாக தெலுங்கில் பிரபலமான 'அருந்ததி' திரைப்படத்தை பலமுறை பார்த்துள்ளார். அந்த படத்தில், கதாநாயகி தன் சுயவிருப்பத்தால் இறந்து, எதிரியை பழிவாங்க மறுபிறவி எடுப்பதுபோன்று காட்சி இடம்பெற்றிருக்கும்.

    அதேபோன்று தானும் சுய விருப்பத்தால் முக்தியடைந்து மறுபிறவி எடுத்து பணக்கார குடும்பத்தில் பிறக்க முடியும் என்று நம்பி உள்ளார். இதுபற்றி தன் குடும்பத்தினரிடமும் கூறியிருக்கிறார். குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை வழங்கி, அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஊருக்கு வெளியே சென்ற ரேணுகாபிரசாத், தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார். அப்போது அந்த வழியாகச் சென்ற சிலர் இதனைப் பார்த்து, சமூக ஆர்வலர்கள் உதவியுடன் ரேணுகாபிரசாத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் 60 சதவீத தீக்காயம் அடைந்ததால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது மரணம் அவர் குடும்பத்தை மட்டுமின்றி அந்த கிராமத்தையே உலுக்கி விட்டது.

    தீக்குளித்த பின்னர் அவர் தன் தந்தையை விரைவில் முக்தி பெறும்படி கூறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. எனவே, அவர் முக்தி பெற்று மறுபிறவி எடுக்கமுடியும் என்ற மூட நம்பிக்கையில் தீக்குளித்திருக்கலாம். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    இதுபற்றி அவரது நெருங்கிய உறவினர் ராஜு கூறும்போது, 'அருந்ததி படத்தை குறைந்தது 15-20 முறையாவது ரேணுகாபிரசாத் பார்த்திருக்கலாம். படத்தில் காட்டப்படும் சில திகில் காட்சிகளில் அவன் வெறித்தனமாக இருந்தான். அவன் நன்றாகப் படித்து நல்ல வேலைக்கு செல்லவேண்டும் என்று விரும்பினோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, திரைப்படங்களுக்கு அடிமையானதால் அவன் உயிர் பறிபோய்விட்டது' என்றார்.

    Next Story
    ×