என் மலர்
இந்தியா

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன்
- பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
புதுடெல்லி:
காஷ்மீரில் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்ரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தானின் உயர்மட்ட தூதர் சாத் அகமது வாராய்ஸ்க்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்றிரவு சம்மன் அனுப்பியது.
அதன் பேரில் ஆஜரான தூதரிடம், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி அந்த நாட்டின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த அதிகாரிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேப்போல பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு படை ஆலோசனை அதிகாரிகளும் திரும்ப அழைக்கப்படுகின்றனர்.
பரஸ்பர உயர் தூதரகங்களில் உள்ள இந்த ஆலோசகர் பதவிகள் ரத்து செய்யப்படுகின்றன. இவர்களுக்கான உதவியாளர் பணியிடங்களும் திரும்ப பெறப்படுகிறது. இரு நாட்டில் உள்ள பரஸ்பர உயர் தூதரகங்களிலும் அதிகாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது உள்ள 55-ல் இருந்து 30 ஆக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.






