என் மலர்
இந்தியா

கனடாவிடம் இருந்து அணுசக்திக்கான யுரேனியம் வாங்க இந்தியா முடிவு - மெகா ஒப்பந்தம் கையெழுத்து
- இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படும்.
கனடா பிரதமர் மார்க் கார்னி அரசுமுறைப் பயணமாக கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி இந்தியா வந்தார்.
அவரது இந்த பயணத்தின் கடைசி நாளான நேற்று, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இரு நாட்டு நலன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, அணு மின்சார உற்பத்திக்கான யுரேனியத்தை வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
இதன் மூலம் கனடாவிடம் இருந்து 190 கோடி டாலர் மதிப்பிலான 11,000 டன் யுரேனியத்தை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் செயல்படும் அணு உலைகளுக்கு யுரேனியம் தட்டுப்பாடு ஏற்படாது என கூறப்படுகிறது.
மேலும், மின்சார வாகனங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கு தேவையான கோபால்ட், நிக்கல், லித்தியம் மற்றும் தாமிரம் ஆகிய தாதுக்களை இந்தியாவுக்கு விநியோகிப்பதிலும் கனடா உதவ முன்வந்துள்ளது.
மேலும், சிறிய ரக அணு உலைகள் மற்றும் நவீன அணு உலை தொழில்நுட்பங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முயற்சியால் உருவான சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு மற்றும் சர்வதேச உயிரி எரிபொருள் கூட்டமைப்பு ஆகியவற்றில் கனடா இணைய முடிவு செய்துள்ளது.
மேலும் இந்தியா-கனடா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சேமிப்பு உச்சி மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, விண்வெளித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியாவுடன் உறவை வலுப்படுத்துவோம் என்று மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.






