என் மலர்
இந்தியா

வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்கள் விவரங்களை வழங்க வேண்டும்- மும்பை போலீசார் உத்தரவு
- வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருப்பவர்கள் மீது சில சோதனைகளை நடத்த வேண்டும்.
- வாடகைக்கு இருப்பவர் ஒரு வெளிநாட்டவராக இருந்தால், அவரது பெயர், பாஸ்போர்ட் விவரங்கள் போன்றவை வழங்கப்பட வேண்டும்.
மும்பை:
சமூக விரோத சக்திகள் மக்கள் அதிகம் புழங்கும் குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருந்து நாசவேலைகளில் ஈடுபடுவதை தடுக்கவும், சட்டவிரோதமாக குடியேறும் வெளிநாட்டினரை கண்காணிக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள அனைத்து வீட்டு உரிமையாளர்களும் தங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்களை போலீசாரின் ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.
போலீசாரின் உத்தரவில் கூறி இருப்பதாவது:-
வாடகைக்கு இருப்பவர்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் அல்லது சமூக விரோத சக்திகள் நாசவேலை நடவடிக்கைகள், கலவரங்கள், மோதல்கள் போன்றவற்றை ஏற்படுத்தாமல் இருக்க வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு இருப்பவர்கள் மீது சில சோதனைகளை நடத்த வேண்டும்.
ஒவ்வொரு வீட்டு உரிமையாளர், ஓட்டல், லாட்ஜ், விருந்தினர் மாளிகை போன்ற சொத்துகளை வாடகைக்கு விட்டுள்ளவர்கள் தங்கள் இடத்தில் வாடகைக்கு இருப்பவர்களின் விவரங்களை உடனடியாக மும்பை போலீசாரின் போர்ட்டலில் வழங்க வேண்டும்.
வாடகைக்கு இருப்பவர் ஒரு வெளிநாட்டவராக இருந்தால், அவரது பெயர், பாஸ்போர்ட் விவரங்கள் போன்றவை வழங்கப்பட வேண்டும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு 31(நேற்று) முதல் வருகிற மே 29-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






