என் மலர்
இந்தியா

கர்நாடகாவில் கனமழை- 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
- 7 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
பெங்களூர்:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இந்தாண்டில் 4-முறை மேட்டூர் அணை நிரம்பியது.
இதற்கிடையே கடந்த சிலநாட்களாக மழை நின்றதால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம்கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகாவில் உள்ள குடகு, சிக்கமகளூரு, கோலார், தட்சிணகன்னடா, உடுப்பி, ஹாசன், சிவமொக்கா ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 7 மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.






