என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாச்சலப்பிரதேசத்தில் மேக வெடிப்பால் பலத்த மழை: 300-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிப்பு
    X

    இமாச்சலப்பிரதேசத்தில் மேக வெடிப்பால் பலத்த மழை: 300-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிப்பு

    • மண்டி மாவட்டத்தில் மட்டும் 179 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
    • டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    சிம்லா:

    இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

    லாஷவுல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் பள்ளத்தாக்கில் மேக வெடிப்பால் பலத்த மழை கொட்டியது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கர்பத் கிராமத்தில் நிலைமை மோசமாக உள்ளது. முன் எச்சரிக்கையாக அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    சிம்லா மாவட்டத்தில் பலத்த மழையால் பஸ் நிலையம் இடிந்து விழுந்தது. இதனால் அருகில் உள்ள பல கடைகள் சேதம் அடைந்தன. கர்பத், கங்குட் மற்றும் உட்கோஸ் நாலா பகுதிகளிலும் மேலும் 2 பாலங்கள் இடிந்து விழுந்தன.

    மேக வெடிப்பால் 2 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மண்டி மாவட்டத்தில் மட்டும் 179 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இமாச்சலப்பிரதேசத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல தலைநகர் டெல்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டெல்லியில் இன்றும் பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்கும் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×