search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நடிகை சோனாலி உடலில் தாக்குதல் காயங்கள்: கூட்டாளிகள் இருவரிடம் போலீசார் விசாரணை
    X

    நடிகை சோனாலி உடலில் தாக்குதல் காயங்கள்: கூட்டாளிகள் இருவரிடம் போலீசார் விசாரணை

    • பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் 22-ந்தேதி மரணம் அடைந்தார்.
    • போதை ஏற்படுத்தும் வேதிப்பொருளை பானத்தில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக கூட்டாளிகள் ஒப்புதல்.

    பனாஜி :

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42) தனது கூட்டாளிகள் இருவருடன் கோவா சென்றிருந்த நிலையில் அங்கு கடந்த 22-ந்தேதி மர்ம மரணம் அடைந்தார்.

    சோனாலி மாரடைப்பால் இறந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர், உடன் சென்றிருந்த கூட்டாளிகள் இருவரால் கொலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரர் ரிங்கு டாகா கோவா போலீசில் புகார் அளித்தார்.

    அதன் அடிப்படையில், சோனாலியின் கூட்டாளிகளான சுதிர் சக்வான், சுக்விந்தர் வாசி ஆகிய இருவரை போலீசார் நேற்று முன்தினம் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில், வடக்கு கோவா அஞ்சுனாவில் உள்ள ரெஸ்டாரண்டில் நடந்த ஒரு பார்ட்டியில், போதை ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளை பானத்தில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக கூட்டாளிகள் இருவரும் ஒப்புக்கொண்டிருப்பதாக போலீசார் கூறினர். கூடுதல் தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.

    நேற்று முன்தினம் அளிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சோனாலியின் உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் காயங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டாளிகள் இருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றாலும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் வட்டாரங்கள் கூறின.

    இந்நிலையில் நடிகை சோனாலி மரணம் தொடர்பாக ஆளும் பா.ஜ.க. கூட்டணி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.

    சோனாலி மரண வழக்கை டி.ஜி.பி. கண்காணித்து வருவதாகவும், இந்த வழக்கில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க போலீசுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×