search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குலாம் நபி ஆசாத் விலகலின் பின்னணியில் பாரதிய ஜனதா?- காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தேகம்
    X

    குலாம் நபி ஆசாத்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குலாம் நபி ஆசாத் விலகலின் பின்னணியில் பாரதிய ஜனதா?- காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தேகம்

    • காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் விரைவில் தனிக்கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.
    • குலாம் நபி ஆசாத் விலகல் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருக்கலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய 5 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கட்சியின் கட்டமைப்பை ராகுல் சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரசில் முதல்-மந்திரி உள்ளிட்ட முக்கிய பதவிகள் வகித்து வந்த குலாம் நபி ஆசாத் திடீரென விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 8 காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகி விட்டனர். இவர்களில் முன்னாள் மந்திரிகளும் அடங்கும். இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் சில காங்கிரஸ் பிரமுகர்களும் காங்கிரசில் இருந்து வெளியேறி குலாம் நபி ஆசாத் பக்கம் திரும்புவார்கள் என தெரிகிறது.

    காங்கிரசில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் விரைவில் தனிக்கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் காயை நகர்த்த தொடங்கி உள்ளார். காங்கிரசில் அதிருப்தியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    இந்த சூழ்நிலையில் குலாம் நபி ஆசாத் விலகல் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருக்கலாம் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தேகம் அடைந்து உள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபிறகு விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குலாம் நபி ஆசாத் ஏற்கனவே அந்த மாநிலத்தில் கடந்த 2005 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை முதல்-மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு இந்த தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் காங்கிரஸ் தலைமையால் பெரிதும் மதிக்கப்பட்ட நபர் கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டார்.

    கட்சியின் மீது அவர் தொடுத்துள்ள தனிப்பட்ட தாக்குதல் விதம் அவரது உண்மையான பண்பு நலனை வெளிப்படுத்துகிறது. அவரது மரபணுவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து விட்டார் என்று தெரிவித்து உள்ளார்.

    பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

    இளைஞர் காங்கிரஸ் காலம் முதல் குலாம் நபி ஆசாத்துக்கு எல்லா பதவிகளையும் காங்கிரஸ் வழங்கி உள்ளது. மத்திய மந்திரி உள்ளிட்ட பதவிகளையும் அவர் அனுபவித்து உள்ளார். நீண்ட காலம் இந்த பதவியில் இருந்து விட்டு தற்போது அவர் கட்சி மீது குறை சொல்லி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறும்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைந்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். பதவி இல்லாமல் ஒரு நிமிஷம் கூட அவரால் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

    Next Story
    ×